
சென்னை,
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ள நிலையில், வரும் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.