தமிழகத்தில் 4 நாள் அரசு முறை பயணம் : ஜனாதிபதி திரவுபதி ஊட்டி வந்தார்; 1000 போலீசார் பாதுகாப்பு; 6 நாள் டிரோன் பறக்க தடை

2 months ago 12

ஊட்டி:தமிழகத்தில் 4 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். அவரது வருகையையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் அவரை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் வரவேற்றனர். ஊட்டி ராஜ்பவனில் தங்கி ஓய்வு எடுக்கும் அவர், நாளை கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள டிஎஸ்எஸ்சி எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு சென்று, பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, ஊட்டி ராஜ்பவனில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் உள்ளூர் பழங்குடியின சமுதாய மக்களை சந்திக்கிறார். 30ம் தேதி காலை 10.30 மணிக்கு ஊட்டியில் இருந்து கோவை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, பின்னர் திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்ட சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், நீலகிரி எஸ்பி நிஷா ஆகியோர் மேற்பார்வையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 6 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் 4 நாள் அரசு முறை பயணம் : ஜனாதிபதி திரவுபதி ஊட்டி வந்தார்; 1000 போலீசார் பாதுகாப்பு; 6 நாள் டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article