சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இன்று (சனிக்கிழமை) அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.