சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 111வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கேரள உறுப்பினர் மட்டும் நேரிடையாக கலந்து கொண்டார். மற்ற உறுப்பினர்கள் அவர்களது தலைமையிடத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் உறுப்பினர் தயாளகுமார், தலைமைப் பொறியாளர், திருச்சி மண்டலம், திருச்சியிலிருந்தும் மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு சென்னையில் இருந்தும் காணொலி காட்சி மூலம் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் உறுப்பினர், 2024 ஜூன் 1ம் தேதி முதல் 2025 ஜனவரி 27 வரை உள்ள காலகட்டத்தில் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீர்வரத்து, நீர் இருப்பு ஆகிய விவரங்களை தெரிவித்தனர். இக்காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற ஆணையின்படி தரவேண்டிய 166.894 டி.எம்.சி. அடி நீருக்கு பதிலாக 285.999 டி.எம்.சி. பெறப்பட்டுள்ளது. தற்பொழுது 27ம் தேதி மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு 79.807 டி.எம்.சி அடி நீர் உள்ளது. 28ம் தேதி முதல் மேட்டூர் அணை பாசனத்திற்காக வெளியேற்றபட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக மட்டும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் உறுப்பினர், 2024-2025ம் ஆண்டின் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 16 முதல் ஜனவரி 27ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் காவிரி படுகையில், இயல்பைவிட சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 2 வாரங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் ஜனவரி இன்று மற்றும் நாளை தேதிகளில் மழை இயல்பைவிட சற்று கூடுதலாக இருக்கும். அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழ்நாடு அரசின் உறுப்பினர், இவ்வாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழலுக்கான நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இக்குழுவின் அடுத்த கூட்டம், 2025, பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.
The post தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிட வேண்டும்: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.