சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்ஆர். இளங்கோ எம்பி நேற்று அளித்த பேட்டி:
அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின் போது அளித்த விவரங்களின்படி 2013ம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021ல் ஒரு வழக்கு பதிந்து அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் இருந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை இந்த சோதனை நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
அரசு அலுவலகங்களிலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீதும் தொடங்கப்படும் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எப்போது எடுக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். நீட் தேர்வு சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வரின் ஒருங்கிணைப்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் சேர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுதும், தமிழக சட்டப்பேரவை இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றிய போதும், மும்மொழிப் கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக முதல்வர் வலியுறுத்தி சொன்ன போதும்,வக்பு சட்டத் திருத்தம் பற்றி தமிழக முதல்வர் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை எதிர்கொள்ள இயலாமல் திமுக தலைவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் காலம் கடந்த சட்டத்தை மீறிய சோதனைகள் நடந்து வருகின்றன.
ஊடகங்களில் அமைச்சர் பெயரையும் அவரது மகன், குடும்பத்தினுடைய பெயரையும் சொல்லி ஏதோ ஒரு ஊழல் குற்றம் போல சித்தரிக்க முயல்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனையின் போது குறைந்தபட்சமாக தெரிவித்த தகவல்களின்படி அந்த வழக்கு 2013ல் நடந்த நிகழ்வுக்காக 2021ல் சிபிஐயினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வங்கி பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமேயன்றி, எந்த ஒரு ஊழல் வழக்கையும் சார்ந்தது அல்ல. எப்போதெல்லாம் தமிழகத்திற்காக குரல் கொடுக்கின்றோமோ, எப்போதெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிறாமோ, எப்போதெல்லாம் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள். மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள்.
The post தமிழகத்திற்காக குரல் கொடுத்தால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள்: மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி பேட்டி appeared first on Dinakaran.