![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36416327-vijay.gif)
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கடந்த 24-ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். த.வெ.க.வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளோடு இன்று (ஜனவரி 29ம் தேதி) ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் த.வெ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்த விஜய், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலேசானை கூட்டத்தில் பேசிய விஜய், "உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள்தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள் பயணித்தீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கை எப்படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.
அனைவரும் சேர்ந்து பயணிப்போம் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று மாவட்ட நிர்வாகிககளுக்கு அவர் அறிவுறுத்தினார்.