தமிழக வெற்றிக் கழக மாநாடு: இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

3 months ago 17

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலமும், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 207 ஏக்கர் நிலமும் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டு மேடைக்கு விஜய் செல்லும் வகையில் தனி வழிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு அப்பாதையில் தார் சாலை போடப்பட்டுள்ளது.

மாநாட்டு மேடைக்கு வரும் விஜய், தொண்டர்கள், ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்த ஏதுவாக மாநாட்டு மேடையுடன் 800 மீட்டர் நீளத்திலும், 12 அடி உயரத்திலும் ரேம்ப் வாக் (நடைமேடை) அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை பறக்க விட்டுள்ளனர்.

 

மாநாட்டின் பாதுகாப்பு கருதியும், மாநாடு நடைபெறும் பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையிலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் முழுவதும் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் உள் அலங்காரப்பணிகள் நடந்து வருகிறது. மேடையின் முகப்பில் கட்சி கொடியின் நிறங்களுடனும், கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள 2 யானைகளின் உருவமும் அடங்கிய விளம்பர பதாகை வைக்கப்பட்டு அதன் கீழ் பகுதியில் வெற்றிக் கொள்கை திருவிழா என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

 

மாநாட்டின் பிரதான நுழைவுவாயில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்று தத்ரூபமாக வடிவமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அதில் 2 யானைகள் இருபுறமும் பிளிறும் வகையில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த யானைகளுக்கு மேல்புறத்தில் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட உள்ளது.

 

இதுதவிர மாநாட்டு மேடைக்கு அருகில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் கட்-அவுட்டுகள் தவெக மாநாடு நிகழ்விட முகப்பில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களின் வசதிக்காக 300 குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன.

Read Entire Article