தமிழக வரலாற்றில் சக்தி வழிபாடு

3 months ago 31

பொதுவாகச் சக்தி என்ற ஆற்றல் உலகில் எங்கும் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. உலகில் உள்ள அனைத்திலும் சக்தி என்ற ஆற்றல் ஒளிந்துள்ளதைக் காணலாம். சக்தி என்பது தாயின் அம்சமாகத் திகழும் ஒன்றாகும். தாயிடம் மகன் பழகுவதற்கும், தந்தையிடம் மகன் பழகுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. தாய் மகனுக்கு எத்துனை வயதானாலும் ஒரே மாதிரியான அன்பை விதைப்பவளாகவே காணப் படுகிறாள். அன்னை வழிபாட்டின் தோற்றத்திலிருந்து சக்தி வழிபாடு தோன்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் அறுவகைச் சமயம் உள்ளன. இவை சிவவழிபாடு, சக்திவழிபாடு, சூரிய வழிபாடு என்ற வழிபாடுகளை மேற்கொள்கின்றன.

இவற்றில் இறுதி இரண்டும் சிவாலயத்தில் செய்யப்பெறும் சில வழிபாட்டின் அங்கமாக அமைவதாகும். தனி நிலையில் இல்லை. முருக வழிபாடு கௌமாரம் எனப்படும். தனியான சிறப்புடைய சக்தி வழிபாட்டிற்குரிய நூல்கள் `தந்திரம்’ என்று வழங்கப்படும். பரம்பொருள் ஆகிய சக்தி வழிபாடு உண்மையான மெய்யுணர்வு காரணமாக அமைவது. அம்மா அல்லது அம்மை என்ற சொல் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மாதா என்ற சொல்லும் வழங்கி வருகிறது. இந்த அம்மை மற்றும் மாதா என்ற சொல் வேறு எந்த சொல்லுடனும் சேராமல் தனியே உச்சரிக்கப்பட்டால் அதற்கு சீதளா தேவி என்ற பொருள்படும்.

சக்தி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்

‘வழிபாடு’ என்பது வழிபடு என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. வழி+படு எனப் பிரிந்து ‘வழி’ என்பது பாதை எனவும், ‘படு’ என்பது செல்லுதல் என்பதாகவும் அமைந்து வழியிற் செல்லுதல் என்ற பொருளைத் தருவதாகும் (Proceeding on the way) இதற்குப் பின்பற்றுகை எனப்படும் (Following). மேலும், இச்சொல்லிற்கு வணக்கம் (Reverence & donation) பூசனை (Ritual worship) என்ற பொருள்களைப் பகிர்கின்றது பிங்கள் நிகண்டு. வணக்கம் என்ற பொருளைத் தருகின்றது செந்தமிழகராதி. வணக்கம், கோட்பாடு என்ற இரு பொருள்களையும் தருகிறது தற்காலத் தமிழகராதி.

வணக்கம், வழியிற் செல்லுகை, பின்பற்றுகை, பூசனை, வழக்கம், சமயம் கோட்பாடு என்ற பொருள்களை நவிழ்கின்றது கழகத் தமிழகராதி. மேலும், சமயத்தில் வழிபாடு என்ற சொல் கௌரவம். கண்ணியம், வணக்கம் மதிப்பு என்ற பொருள்களைப் பெறுகின்றது என்பதை அறிய முடிகிறது. உயிர் உள்ளவற்றையோ, உயிர் இல்லாதவற்றையோ கொண்டு வழிபடுவதை காணலாம்.

சங்க காலச் சக்தி வழிபாடு

சங்க காலத்தில் போரில் வெற்றியைத் தரும் தெய்வமாகக் காளி போற்றப்பட்டாள். அவளைக் கொற்றவை என்ற பெயரால் அழைத்தனர். கொற்றவைக்குப் ‘‘பழையோழ்’’ என்ற பெயர் தரப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கொற்றவை வழிபாடே தமிழர்களுடைய மிகப் பழமையான வழிபாடு என்று அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும் பொழுது கொற்றவை வழிபாட்டைக் காட்டுகிறார் இளங்கோவடிகள். கொற்றவைக் கோலம் கொண்ட பெண், தெய்வம் ஏறப்பெற்றவளாகக் காட்டப்படும் செய்திகளும் அங்கு காணப்படுகின்றன. மேலும், அங்கு கூறப் படும் கொற்றவை தெய்வம் வெற்றி தரும் கொற்றவையாகக் கூறப்படுகின்றது.

கள் விளையாட்டி மறுப்பப் பொறாமறவன்
கைவில் ஏந்திப்
புள்ளும் வழிபடராப் புல்லார் நிறைகருதிப்
போகும்காலை
கொள்ளும் கொடி எடுத்துக் கொற்றவையும்
கொடுமரம்முன் செல்லும் போலும்’’
என்று சிலப்பதிகாரம் போருக்கு போகும் பொழுது வெற்றியைத் தரக்கூடியத் தெய்வமாகக் கொற்றவை அமைந்ததாகக் குறிப்பிடுகின்றது.

புறப்பொருள் வெண்பாமாலை நூலில் வீரர்கள் கொற்றவை வழிபாட்டைப் போரில் வெற்றி பெறுவதற்காகச் செய்துள்ளார் என்பதை விரிவாக சொல்லுகின்றது. போரில் தன்னுடைய அரசனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வீரர்கள் கொற்றவையை வேண்டிக் கொண்டனர். வெற்றி கிடைத்தால் தாங்கள் தலையை அரிந்து காளிக்குப் பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொண்டனர். வெற்றி பெற்ற களிப்போடு வீரர்கள் தங்கள் தலைகளைத் தாங்களே அரிந்து காளி தேவியின் காலடியில் வைத்தனர். இச்செய்தியை கலிங்கத்துப் பரணியும் குறிப்பிடுகிறது.
இச்செய்திகள் அனைத்தும் காளி என்ற சக்தி வழிபாடானது வெற்றியைத் தரும் தெய்வமாகவும், சக்தியைக் கொடுக்கும் அருளாகவும் மக்கள் கருதியுள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.மேலும், போரில் வெற்றி பெறுவதற்காக வணங்கக்கூடிய முக்கிய தெய்வமாகச் சக்தி வழிபாடு அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

குடைவரைக் கோயில்கள்

குடைவரைக் கோயில்களில் பல்லவர்கள் கொற்றவையை (துர்க்கை) எருமைத் தலைமேல் நின்ற தேவியாக, நான்கு கைகளுடன் ஆழியும் சங்கமும் அபயமளிக்கும் கையும், துடைமீதமர்த்திய கையுமாகக் காட்சியளிப்பது போல அமைத்துள்ளனர்.

சக்தியின் சிறு தெய்வமாகக் கருதப்படும் திரௌபதி இரதம் என்ற கோயிலில் தேவியாகிய கொற்றவையின் சிலை அமைத்துள்ளனர். ஊரின் வடபுறத்தே தேவியர் எழுவருக்குக் கோயில்களை எழுப்பிவிட வேண்டும் என்று வாஸ்து நூல்கள் கூறுவதனைக் கருத்தில் கொண்டு, பல்லவர்கள் தாய்மார்கள் எழுவரின் கோயில்களையும் எழுப்பியுள்ளனர். எனவே, பல்லவர்கள் காலத்தில் கொற்றவைக்கெனத் தனிக் கோயில்கள் எழுப்பப் படாவிட்டாலும், கொற்றவை சிறப்புற்று விளங்கியது என்பது அவர்கள் அமைத்துள்ள சிற்பங்களினாலே விளங்குகிறது.

சோழர் காலத்தில் சிவன் கோயில்களில் அம்மனுக்கு என்று தனிக் கோயில்கள் எழுப்பப்படவில்லை. ‘‘இறைவன் கருவறையிலேயே போகசக்தி அம்மன் என தனித்
திருமேனி வைத்து வழிபடப்பட்டது. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் முதல் இராஜேந்திரன் கல்வெட்டே முதன் முதலில் அம்மன் தனிக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அதன் பிறகு அம்பிகைக்குத் தனிக் கோயில்கள் எழுப்பப்பட்டன என நவிழ்கின்றனர் மா. இராசாமணித்தனார்.’’ தஞ்சையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் பிறாகாலத்தில் அம்மன் கோயில்கள் தோன்றின. ஏழு கன்னியர்க்கும் ஜேட்டா தேவிக்கும் பிறகு கோயில் இல்லை என்று கூறுகின்றார் திரு.தட்சிணாமூர்த்தி. விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றிப் பின் தன் வெற்றியின் சின்னமாக நிசும்பசூதினி என்ற கோயிலை எழுப்பினான்.

விஜயாலய சோழன் நிசும்பசூதினி என்ற கோயிலை எழுப்பியதைக் கல்வெட்டு சாசனம் கூறுகின்றது. சோழ மன்னர்கள் கோயில்களில் உள்ள அம்மன் படிவங்களுக்கு முத்தாலும், பவழத்தாலும் மணிகளாலும் நகைகள் அணிவித்தமையும் அறியலாம். சப்த மாதர்கள், துர்க்கை ஆகிய தெய்வங்களின் வழிபாடும் சோழர் காலத்தில் பெருகியதை உணரலாம்.மதுரையை ஆண்ட நாயக்கர்களும் கோபுரங்கள் அனைத்திலும் சிற்பங்கள் அமைத்தும், ஓவியம் தீட்டியும் தொண்டு புரிந்தனர். சக்தி கோயிலாகிய மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்களும் அங்கு கட்டிய ஆயிரம் கால் மண்டபமும், அதில் உள்ள சிற்பங்களும் போற்றத்தக்கன. மீனாட்சி கோயிலில் அவர்கள் அமைத்த காளி நடனம் ஆடுவது போன்று அமைந்த சிற்பம் உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளது.

நாயக்கர் காலத்தில்தான் சக்தி வழிபாட்டை சிறப்பிக்கும் நவராத்திரித் திருவிழா புதிதாக நாட்டில் நுழைந்தது. சக்தி வழிபாட்டினைச் சிறப்பிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவும், தேரோட்ட விழாவும் சிறப்புற நடக்கத் திருமலை நாயக்கர் பல ஏற்பாடுகளைச் செய்தார் என்பதும், திருமலை பூபதி சில காலமாக மண்டைச் சளி நோயால் துன்புற்றிருந்தார். பலவகை மருந்துகளை அருந்தியும் திருவரங்கம், திருவாணைக்கா கோயில்களில் பல நேர்த்திக்கடன்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் அருளால் மண்டைச் சளி நோய் முற்றிலும் நீங்கியது. அன்று முதல் சக்தி வழிபாட்டில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் தினமும் மதுரை மீனாட்சியை வழிபட வேண்டும் என்பதற்காக கி.பி.1634 ஆம் ஆண்டில் தலைநகரை திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்கு மாற்றியதாக வரலாறு கூறுகின்றது. நாட்டு வருவாயில் லட்சம் பொன்னிற்கு ஆயிரம் பொன் வீதம் சக்தி வழிபாட்டிற்கும், நாற்பதினாயிரம் பொன் விழாக்களுக்கும் எழுதி வைத்தார்.

“கண்ணுதல் அங்கயர்கண்ணி
தனக்கு நலம் பெறவே உன்னத மாகும் கொடிக் கம்பம்
மாபலிபீடமுடன் சொன்னம் அளித்துப் பொன் பூசிவித்
தான் சுகபோகன் எங்கள் மன்னன் திருமலை பூபன்
மதுரை வரோத் யனே’’

என்னும் செய்யுளால் பலிபீடம், கொடிக்கம்பங்கள் அமைத்துப் பொன் தகட்டுக் கவசம் இட்டு அழகுபடுத்திய செய்தியும் அறிகிறோம். மேலும், ‘‘இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சக்தி வழிபாடு நிறைந்து காணப்பட்டுள்ளது. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி என்பது போல, தளங்கள் தோறும் நாமங்கள், மூர்த்தங்கள் வேறுபடப் போற்றப்படுகின்றன. தேசங்கள் தோறும் மாகாணங்கள் தோறும் தேவி வணக்கமும் வழிபாடும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

சக்தியின் வடிவமாக இருக்கக்கூடிய காளி, கருணை பொழியும் வடிவத்திலும், பயங்கர வடிவத்திலும் அமைத்திருக்கின்றாள். மகாராஷ்டிரத்தில் துளசி பவானி என்றும், காஷ்மீரில் குசிர பவானி என்றும், பஞ்சாபில் ஐவல முகி என்றும், குஜராத்தில் அம்பாஜி என்றும், உத்தரபிரதேசத்தில் விந்திய வர்ஜினி என்றும், வங்காளத்தில் காளி என்றும், அசாமில் காங்க்யா என்றும், கர்நாடகத்தில் சாமுண்டி என்றும், காஞ்சி காமாட்சி என்றும், மலையாளத்தில் பகவதி என்றும் வழங்கப்படுகின்றன.

நிறைவாக

இடத்துக்கு இடம் சக்தி வழிபாடு இடம் பெறுவதைக் காண முடிகிறது. இப்படிப் பல பெயர்களில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கொற்றவையாகிய இந்த சக்தியின் வழிபாடு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கக்கூடிய வழிபாடாகத் தமிழக வரலாற்றில் சங்க காலம் தொடங்கி இன்று வரை மிக ஆழமான நம்பிக்கையுடன் வழிபடக்கூடிய ஒரு வழிபாட்டுத் தெய்வமாக சக்தி வழிபாடு அமைந்திருக்கிறது என்பது திண்ணம்.

பார்வை நூல்கள்

1. கலைக்களஞ்சியம்
2. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
3. புறப்பொருள் வெண்பாமாலை – ஐய்யனாரிதனார்
4. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் – கலாநிதி கா. கைலாசபதி
5. நினைத்ததை நிறைவேற்றும் அருள்மிகு அம்மன் ஆலயங்கள் – புஷ்பா அசோக் குமார்.

முனைவர்.இரா.கீதா

 

The post தமிழக வரலாற்றில் சக்தி வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article