சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளங்களிலிருந்து கடந்த 9-ம் தேதி வைத்தியநாதன், மூர்த்தி, அஞ்சலி தேவி ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் 15 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து 15 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், மீனவர்கள் அனைவருக்கும் நவம்பர்11-ம் தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இதன்மூலம் மீனவர்களின் நீதிமன்ற காவல் 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.