புதுடெல்லி,
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3-1-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-11-2024 அன்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 6-12-2024 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களது 'ஸ்ரீ விராஜ் பூமி' (பதிவு எண்.IND-GJ-25-MM-3458) மற்றும் 'மந்தீப்' (பதிவு எண்.IND-GJ-25-MM-1582) பெயர் கொண்ட படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் 3-1-2024 அன்று சிறைபிடித்ததை அறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றுள்ளதாகவும், மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும், மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை மந்திரி, இந்திய தூதரகம் இதைத் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.