பேனா கேட்டு வீட்டில் உள்ளே புகுந்து ஐ.டி. பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்

7 hours ago 4

புனே.

புனே நகரில் உள்ள கோந்த்வா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயது பெண் வசித்து வருகிறார். இவர் புனேயில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இளம்பெண்ணுடன் அவரது சகோதரரும் வசித்து வந்துள்ளார். சகோதரன் வெளியூர் சென்றதால் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

இதை மோப்பம் பிடித்த காமூக ஆசாமி ஒருவர் திட்டமிட்டு ஜ.டி. நிறுவன பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நடந்துள்ளது. அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் கூரியர் டெலிவரி செய்பவர் போல இளம்பெண்ணின் குடியிருப்புக்கு வந்து கதவை தட்டினார். இதையடுத்து பெண் வீட்டின் கதவை திறந்தார்.

அப்போது வங்கி தொடர்பான ஆவணங்கள் கூரியர் மூலம் வந்திருப்பதாக தெரிவித்த ஆசாமி, இதை நீங்கள் பெற்றுக்கொண்டதை உறுதி செய்ய கையெழுத்திட வேண்டும் என்றார். மேலும் தன்னிடம் பேனா இல்லாததால் அதை எடுத்து வருமாறு பெண்ணிடம் கூறினார்.

இதையடுத்து பெண் பேனாவை எடுக்க சென்றபோது, மர்மநபர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உள்புறமாக கதவை பூட்டினார். திடீரென பெண்ணின் மீது பாய்ந்து பலவந்தப்படுத்தி உள்ளார். பின்பு என்ன நடந்தது என்பது பெண்ணுக்கு நினைவில்லை. அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் அவர் இரவு 8.30 மணியளவில் கண்விழித்தபோது உடைகள் கலைந்து அலங்கோலமான நிலையில் இருந்ததை கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார். கூரியர் நிறுவன ஊழியர் போல நடித்து உள்ளே புகுந்த ஆசாமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றதை உணர்ந்துகொண்டார்.

மேலும் தனது செல்போனில் இருந்த ஒரு படத்தை பார்த்து பெண் அதிர்ச்சி அடைந்தார். காமூகனின் முகத்தின் ஒரு பகுதியும், பெண்ணின் முதுகுப்பகுதியும் தெரியும் வகையில் அந்த ஆசாமி எடுத்துள்ள செல்பி படம் இருந்தது. அதில் மிரட்டல் பதிவும் இடம்பெற்று இருந்து. "இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால், உனது அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவேன். "மீண்டும் வருவேன்" என்று அந்த ஆசாமி குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இந்த சம்பவம் குறித்து உடனடியாக உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்களின் உதவியுடன் போலீசிலும் புகார் அளித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மயக்கமடைய செய்ய ஏதாவது மயக்க ஸ்பிரேயை பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மநபரின் வரைபடத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மர்மநபர் மீது பாலியல் பலாத்காரம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்காக போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த ஐ.டி. பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article