![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/23/35362499-anna.gif)
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்தது ராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தேன். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தான் ராஜதந்திரமா என்று கேட்டிருக்கிறார். எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.
அண்டை நாடான இலங்கையோடு நல்லிணக்கமும், நட்புறவும் இருக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவின்படி தான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. மனித வாடையே இல்லாத, மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய நிலப்பகுதி தீவு தான் கச்சத்தீவு. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய - இலங்கை கடல் எல்லை 1974 ம் ஆண்டும், வங்கக் கடலின் மன்னார் வளைகுடா பகுதி கடல் எல்லை 1976 ம் ஆண்டும் ஒப்பந்தத்தின் மூலமும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களின்படி இந்திய மீனவர்களும், கிறிஸ்துவ சமுதாயத்தினரும் ஒப்பந்த காலத்திற்கு முன் எவ்வாறு கச்சத்தீவுக்கு சென்று வந்தார்களோ அதேபோல கச்சத்தீவுக்கு சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விசாவோ வேறு எந்தவிதமான அனுமதியோ இலங்கை அரசிடம் பெற வேண்டியதில்லை. இதன்மூலம் தமிழக மீனவர்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக கச்சத்தீவுக்கு செல்லவோ, ஓய்வெடுக்கவோ, மீன்பிடி வலைகளை உலர்த்தவோ, ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கவோ முழு உரிமை உண்டு.
கச்சத்தீவை ஈடுகட்டும் வகையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி தெற்கில் அபரிதமான மீன்வளம்மிக்க வேட்ஜ் கடல் பகுதியில் (Wadge Bank) தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கிற உரிமை அதே ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதையெல்லாம் மூடி மறைக்கின்ற வகையில் அண்ணாமலையின் பிரச்சாரம் அமைந்துள்ளது.
எனினும் இந்திய மீனவர்களின் குறிப்பாக, தமிழக மீனவர்களின் பிரச்சினை என்னவெனில், மீன்வளம் மிக அதிகமாக காணப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் நீண்ட நெடுங்காலமாக மீன்பிடிக்கிற உரிமை சில காலமாக மறுக்கப்படுவது தான். இதனால் இலங்கை கடல் எல்லைக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பிறகு இந்திய அரசு தலையிட்டு விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அக்டோபர் 26, 2008 ஆம் ஆண்டில் இருநாட்டு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய - இலங்கை இடையிலான ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியா - இலங்கைக்கு இடையிலான கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான மற்றும் வாழ்வாதார அம்சங்களை கருத்தில் கொண்டு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதற்கு நடைமுறை ஏற்பாடுகளை செய்வதென இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டிருப்பதை 2008 ஒப்பந்தம் உறுதி செய்கிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன்பிடிப்பதை 2009 போருக்கு பிறகு அங்கு வாழ்கிற தமிழ் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கருதி, எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக மீனவர்கள் இழுவை வலை கொண்ட படகுகள் மூலம் மீன்பிடிப்பதை அவர்கள் எதிர்க்கிறார்கள். இதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட மீண்டும் 2010 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையே கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது, இக்குழு தலையிட்டு தீர்த்து வைத்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் கூட்டு நடவடிக்கைக்குழு அடிக்கடி கூடாத காரணத்தால் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழக மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று பேசுதை, பிரதமர் மோடி 2014 தேர்தலுக்கு முன்பு கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்து விட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கு 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்று அன்றே காங்கிரஸ் கட்சி அவருக்கு உரிய பதிலை கொடுத்தது. மேலும், சுப்ரீம்கோர்ட்டில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், 'கச்சத்தீவு இருநாடுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1974, 1976 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. அதை இனி மீட்க முடியாது. அப்படி மீட்பதற்காக இலங்கை அரசோடு போரையா தொடுக்க முடியும் ?" என்று 1 ஏப்ரல் 2024 இல் கூறியது என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இதன்மூலம் அரசியல் ஆதாயத்திற்காக பேசி வரும் பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 2024 ம் ஆண்டில் மட்டும் 530 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையினரால் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அண்ணாமலை விளக்குவாரா ?
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிற உரிமை போராட்டத்திற்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது.
அதன்படி மீன் வளம் மிக்க இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை மத்திய பா.ஜ.க. அரசிடம் பேசி பெற்றுத் தருவதற்கு அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ? உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கான மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும்.
அதைவிடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கில் அண்ணாமலை தொடர்ந்து பேசுவாரேயானால், தமிழக மீனவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.