சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய மானிய ேகாரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருவாடனை கருமாணிக்கம் (காங்கிரஸ்) பேசியதாவது:
பயிர் காப்பீடுத் திட்டம் தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசு அத்துமீறி செயல்படுகிறது. பல மீனவர்களை சுட்டு கொன்று இருக்கிறார்கள். பல மீனவர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதேபோல இலங்கை நீதிமன்றம் கடுமையான அபராதங்களை விதிக்கிறது. இவை அனைத்தையும் சரி செய்ய தமிழக முதல்வர் 70 மேற்பட்ட கடிதங்கள் எழுதியும் அதற்கு ஒரு சுமுக சூழல் ஏற்பட்டுள்ளதா என்றால் ஏற்படவில்லை. எனவே, ஒன்றிய அரசை கவனம் ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உண்ணா விரத போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறது.
அதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து தமிழக கூட்டணிக் கட்சிகளும் தொடர் உண்ணா விரதத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன். மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது ஒரு எமர்ஜென்சி தேவை. அதற்கு தீர்வு காணும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை ஏற்படுத்தித் தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழக மீனவர் பிரச்னைக்கு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நடத்த தயார்: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.