தமிழக மக்களுக்கு நண்பராக விளங்கியவர் - மன்மோகன் சிங் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

14 hours ago 1

சென்னை,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப்பெரும் சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து, அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்.

நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாக பேசினார், ஆனால் மிகுதியாக சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளை புரிந்து கொண்டு, அவற்றை தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்கு துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவை கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பை பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டு சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த அனைத்து தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டி தொடர்ந்து வழிகாட்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Deeply saddened by the passing of former Prime Minister Dr. Manmohan Singh, a statesman whose intellect and leadership steered India's economic transformation. His tenure marked an era of steady growth, social progress, and reforms that improved the lives of millions.Dr.… pic.twitter.com/8YhWv6EDBu

— M.K.Stalin (@mkstalin) December 26, 2024
Read Entire Article