சென்னை: “இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். அமைச்சரின் இந்த அதிகாரச் செருக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான கூட்டாட்சி முறையையும் அவமதித்துப் பேசியுள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ‘சமாக்ரா சிக்‌ஷா’ திட்டத்திற்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு விடுவிக்காமல் இழுத்தடித்து வருகிறது.