சென்னை: “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் மீது மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதை நியாயப்படுத்தியதுடன், மாநிலத்தின் நிதி உரிமையை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆணவமாகப் பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் தமிழகம் ஏற்க மறுத்தால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே கூறியிருந்தார்.