தமிழக பட்ஜெட் கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்

3 hours ago 1

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு எந்தப் பயனும், நன்மையும் தராத வெற்று அறிக்கையாகும். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 இடங்களில் இந்த வெற்று அறிக்கையை ஒளிபரப்ப பல இலட்ச ரூபாய் மக்கள் வரிப்பணமும் இதற்காக வீணடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் என்பது அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்டது. அதற்கு காதுகள் கிடையாது. அகன்ற வாயும், நீண்ட கால்களும் மட்டுமே உண்டு. அந்த கால்களால் மக்களை நசுக்கி, அதனை வாயினால் பேசி நியாயப்படுத்தும் என்ற பேருண்மையை நிறுவும் வகையில் பரந்தூர் வானூர்தி திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 1000 நாட்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை விரைந்து நிறைவேற்றுவோம் என்று தி.மு.க அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் வெறும் 57 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. தற்போது ஆட்சியின் இறுதி ஆண்டில் இன்னும் 40 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை எப்படி நம்ப முடியும்?.

தி.மு.க ஆட்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனம் என்பதே முற்று முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது. தற்போது 20 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையில் ஆசிரியர் நியமன அறிவிப்பு 2500ஐ தாண்டவில்லை. இதுதான் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தி.மு.க அரசு கொண்டுள்ள அக்கறையா?.

இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் அரசு காலிப்பணி இடங்களைக் கூட நிரப்பப்போவதில்லை என்பதையும், தேர்தல் அறிக்கையில் சொன்னதும் பச்சைப்பொய் என்பதையும் இந்த நிதிநிலை அறிக்கை மூலம் தி.மு.க அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெளியிடாமல், மற்றொரு வாக்குறுதியையும் பொய்யாக்கி அரசு ஊழியர்களை தி.மு.க அரசு வஞ்சித்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்விக்கடன் ரத்து, மாதாந்திர மின் கட்டணம் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெறவில்லை.

சென்னையில் சமச்சீர் குடிநீர் வழங்க நடவடிக்கை, புதிய துணை நகரம், அடையாறு நதி மீட்க 1500 கோடி, சென்னை திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்று இறுதியாண்டு நிதிநிலை அறிக்கையில், புதிது புதிதாக திட்டங்களை அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இவற்றை எல்லாம் செய்யாமல் தி.மு.க அரசு என்ன செய்து கொண்டிருந்தது?.

4 ஆண்டுகளில் செய்யாததை மீதமிருக்கும் ஓராண்டில் தி.மு.க அரசு செய்யும் என்பதை எப்படி நம்ப முடியும்?. ஓராண்டில் நூறாண்டு சாதனை, ஈராண்டில் ஈடில்லா சாதனை என்றெல்லாம் விளம்பரங்கள் செய்த தி.மு.க அரசு குடிநீர் கூட முறையாக வழங்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 4 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மாணவர்கள் கல்வியைப் பாழாக்கிவிட்டு விட்டு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு மீண்டும் வழங்க முன்வந்துள்ளது தி.மு.க அரசின் சுயநலத்தையே காட்டுகிறது.

காலை உணவுத் திட்டத்தைச் சத்துணவு பணியாளர்களிடம் ஒப்படைத்து அவர்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை.

அரசு மதுபான கடைகளின் மூலம் தமிழ்நாட்டுக் குடும்பங்களைச் சீரழித்துத் தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு, குடும்ப நலனுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு அறிவித்த 38,925 கோடியிலிருந்து 34,153 கோடியாக தி.மு.க அரசு குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

வீடுகள் இல்லாது பல்லாயிரம் மக்கள் வீதியில் குடியிருக்கும் நிலையில், வீட்டுவசதிக்கான ஒதுக்கீடும் கடந்த ஆண்டு அறிவித்த 45,514 கோடியிலிருந்து 36,655 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குரியதாகும்.

ஆட்சி முடியும் தருவாயில் உரிமைத்தொகை வழங்கப்படாத பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் கூறுவது மற்றுமொரு ஏமாற்றாகும். ஒரு நாளைக்கு ரூபாய் 40 வழங்குவதுதான் பெண்களுக்கான உரிமையா?. அதைக்கூட வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்று தவிர்த்துத் துரோகமிழைத்தது தி.மு.க அரசு. வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்தே செய்யும் நிலையில் உள்ளபோது, அவர்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்பதும் பெருங்கொடுமையாகும்.

கடந்த 4 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 9 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கடன் 1 இலட்சம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில், தி.மு.க அரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அடுத்த ஓராண்டிற்கே 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடிகள் கடன் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 10 இலட்சம் கோடியைத் தாண்டிவிடும்.

3.73 இலட்சம் கோடி வருவாயில் தமிழ்நாடு அரசு 70,000 கோடியை அதாவது வருவாயில் 19 சதவீதம் வட்டியாக மட்டுமே கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாகத்திற்கான அரசாங்க செலவே 1.41 லட்சம் கோடி (37.8 சதவீதம்) எனும்போது, அதில் பாதியைக் கடனுக்கான வட்டியாகச் செலுத்தும் அரசு, எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும்?.

தமிழ்நாடு அரசு ஏறத்தாழ கடன் வாங்கும் வரம்பினை நெருங்கிவிட்ட நிலையில், அரசின் கடன்வாங்கும் திறன் கட்டுக்குள் இருப்பதாக ஆட்சியாளர்கள் பெருமை பேசுவது வெட்கக்கேடானது.

4 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில், அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதே தவிர, அக்கடனை மூலதனமாகக் கொண்டு தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கவில்லை; உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.

நாம் தமிழர் கட்சி தனது ஆட்சி செயற்பாட்டு வரைவில் முன்வைத்த மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கான 'அன்புச்சோலை' என்ற முதியோர் பாதுகாப்புத் திட்டத்தைப் பெயரைக் கூட மாற்றாமல் அப்படியே அறிவித்துள்ள தி.மு.க அரசுக்கு, இத்திட்டம் கடந்த 4 ஆண்டுகளில் நினைவுக்கு வராமல் போனது ஏன்?. ஆட்சி முடியும் தருவாயில் தான் தி.மு.க அரசுக்கு மக்கள் மீது அன்பு வருகிறதா?.

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை மட்டுமே குறியாக கொண்டு சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு தி.மு.க அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாத, கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று நிதிநிலை அறிக்கை!@CMOTamilnadu @mkstalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு எந்தப் பயனும், நன்மையும் தராத… pic.twitter.com/RGbMFawyQT

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 14, 2025


Read Entire Article