சென்னை: முக்கிய நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், 2025-26ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து அமைச்சர் சேகர்பாபு வாழ்த்துப் பெற்றார். பின்னர் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறையில் இந்த ஆண்டு 2090 கோயில்களில் ரூ.926 கோடியில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. ஒருகால பூஜை திட்டத்திற்கு ரூ.25 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஓதுவார் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருச்செந்தூர், திருவரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 திருக்கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கான தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும். திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி தினத்தன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். பழனி தண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளன்று -கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக புதிய பல்தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும். திருச்சி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக புதிய கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும்
துறைநிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 4,000 லிருந்து ரூ. 5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துறைநிலை குடும்ப ஓய்வூதியம் ரூ. 2,000/-லிருந்து ரூ. 2,500/- ஆக உயர்ந்துள்ளது. EPF ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு, துறைநிலை ஓய்வூதியத்திற்கு , குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைத்தொகை வழங்கப்படும்
25 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம், மேலும் 5 திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும். மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் தற்போது 20 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் 108 திருவிளக்கு வழிபாடு, மேலும் 5 அம்மன் திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும்.
மகாசிவராத்திரி விழா இவ்வாண்டு கூடுதலாக 3 திருக்கோயில்களில் நடத்தப்படும். அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், இராமேசுவரம், அருள்மிகு விருத்தகிரீசுவரர் திருக்கோயில், விருத்தாசலம், அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், திருநாகேசுவரம், ஆகிய கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடத்தப்படும்.
ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சமயபுரம், திருவேற்காடு, ஆனைமலை, பண்ணாரி, மேல்மலையனூர், பெரியபாளையம் உள்ளிட்ட 10 திருக்கோயில்களில் கூழ் வார்க்கப்படும். ரூ. 1 கோடியில் வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்குப் புதிய வெள்ளித் தேர் செய்யப்படும்.
அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டதைப் போல் இந்த ஆண்டு கூடுதலாக 2 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். கோவை மாவட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவர சுவாமி திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
ரூ. 16.53 கோடியில் 15 திருக்கோயில்களில் புதிய திருத்தேர்கள் உருவாக்கப்படும். ரூ. 3 கோடியில் 11 திருக்கோயில்களின் திருத்தேர்கள் மராமத்து செய்யப்படும். இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவின் சார்பில் இவ்வாண்டும் ஆன்மிக நூல்கள், சமய நூல்கள், கையடக்க சிற்றேடுகள், இறைதுதி பாடல்கள், பாராயணப் புத்தகங்கள், வழிகாட்டி கையேடுகள் உள்பட 300 அரிய நூல்கள் வெளியிடப்படும்.
பணிக்காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 3 இலட்சம் குடும்பநல நிதியானது ரூ. 4 இலட்சமாக உயர்த்தப்படும். திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனக் கடன் ரூ. 20,000/- லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். இக்கடன் தொகையில் ரூ. 5,000/-மட்டும் அந்தந்த திருக்கோயில் நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும்
ரூ. 8 கோடியில் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மூலவர் அம்மன் திருமேனிகளுக்கு தங்கக் கவசங்கள் செய்யப்படும். 14 திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்கள் ரூ. 10.52 கோடியில் சீரமைக்கப்படும். ரூ.110 கோடியில் 184 அடி உயர முருகன் சிலை கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக அமைக்கப்படும்
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ. 13 கோடியிலிருந்து ரூ.18 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருக்கோயில் திருப்பணிகளுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ. 6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் உள்ள 19,000 திருக்கோயில்களுக்கு ரூ.15 கோடியில் பூசை உபகரணங்கள் வழங்கப்படும். ரூ.25 கோடி அரசு மானியத்தில் ஒருகால பூசைத் திட்டம் இவ்வாண்டு 1,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
The post தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர் பாபு appeared first on Dinakaran.