சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் புள்ளி விவரங்களை தொகுப்பது குறித்த பயிற்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 25 அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் 2024-2025ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கையின் போது 26.06.2024 அன்று சட்டமன்றத்தில் “அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதனை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், இதன் வாயிலாக அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்நிதியாண்டில் இதற்கென 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்” எனும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வரலாற்றிலேயே முதல்முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) 12.02.2025 முதல் 14.02.2025 வரை 3 நாள்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து 25 அலுவலர்கள் தமிழ்நாடுஅரசினால் அனுப்பப்பட்டுள்ளனர்.
முதல்வரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை, வணிகவரித் துறை, சென்னை மநாகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை ஆகிய துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளர். இப்பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
The post தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி: பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.