
சென்னை ,
தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வீடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டணம் உயராமல் இருக்க தமிழக அரசு புதிய மின் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்தமிழ்நாட்டில் ஜுலை 1, 2025 முதல் மின் கண்டனம் உயர இருப்பதாக வந்த செய்திகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களுக்கு பொருளாதார சிரமத்தை ஏற்றியது தான். கடந்த 2022-ஆம் ஆண்டில் மின் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2024 ஜூலை மாதம் 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இச்சூழலில் 2025 ஜூலை முதல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை 3.16% உயர்த்தலாம் என்று பரிந்துரைத்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த உயர்வு குறைந்த மின்னழுத்த மற்றும் உயர் மின்னழுத்த மின்சார பயன்பாட்டாளர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டண உயர்வு பொருந்தும். மேலும் புதிய மின் இணைப்பை பெறுதல், பிற நிர்வாக கட்டணங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் தமிழக அரசு வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறியிருக்கிறது. அதே சமயம் கடைகள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டண உயர்வு இருக்கக்கூடாது.
மின் கட்டண உயர்வுக்கு கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்வதாக கூறுவதற்கு பதிலாக மாற்று வழியில் வருவாயை ஈட்ட முயற்சிக்கலாம்.ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மின்சார வாரியம் செயல்படும் என தகவல் வெளியாகி உள்ளதால் தமிழக அரசு மின் கட்டணம் உயராமல் இருக்க, சீர்திருத்தத்திற்கு வழி வகுக்க வேண்டும்.
மேலும் மின் திருட்டை முழுமையாக ஒழிக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், மின்கசிவு ஏற்படாமல் இருக்கவும், மக்கள் நலன் கருதி மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கவும், மின்வாரியத்தை இலாபத்தில் இயக்கிடவும் தமிழக அரசு புதிய மின் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .