மதுரை: இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் வெளியானதால், மருத்துவத் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்றவை உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் பணிசுமை அதிகரித்துள்ளதாகவும், நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.