தமிழக அரசு சார்பில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை

6 months ago 20

சென்னை,

தமிழகத்தின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் 'ரிட்' மனு 9-ம் விதியின்படி, ஒரு மனுவுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் உறுதிச்சான்று (அபிடவிட்), முறையாக நோட்டரி வக்கீலின் மூலம் சான்றளிக்கப்பட (அட்டஸ்ட்) வேண்டும். ஆனால் அரசு வழக்குகளில் நீண்டகால நடைமுறையாக, சான்றுரைப்பவரும், துணை நிலை அலுவலரும்தான் உறுதிச்சான்றின் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த விஷயத்தில் சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார். அதன்படி, உறுதிச்சான்றுகள், பதில் மனுக்கள், ஆதார மனுக்கள் உள்ளிட்டவற்றை சான்றளிப்பதில் 'ரிட்' மனு 9-ம் விதி கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே அதன் அடிப்படையில் சில உத்தரவுகளை அரசு தற்போது பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு, துறைத் தலைவர், கலெக்டர் ஆகியோர், மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யும் ஒவ்வொரு உறுதிச்சான்றும், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை, மற்ற கீழ்க்கோர்ட்டுகளில் உள்ள அரசு வக்கீல்களினால்தான் சான்றளிக்கப்பட வேண்டும். அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வக்கீல் அதில் சான்றளிக்கக் கூடாது. சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பிளீடர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Read Entire Article