தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது - ஜி.கே.வாசன்

2 days ago 3

சென்னை,

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதிலிருந்து என்ன தெரிகிறது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

காவலர் கொலை செய்யப்பட்ட இடம் டாஸ்மாக். அப்படி என்றால் டாஸ்மாக் காரணத்தால் போதைப்பொருள் பழக்கத்தால் கொலைகள் நடைபெறுவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து போதைப்பொருளால் உயிரிழப்புகள் நடைபெறுவதும், சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதும் தொடர்கிறது.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, டாஸ்மாக்கை மூட முன்வராத அரசாகவே தமிழக தி.மு.க அரசு ஆட்சி செய்கிறது. எனவே தமிழக அரசு இனியாவது விழித்துக்கொண்டு தமிழக மக்களையும், மக்களைப் பாதுகாக்கும் காவல் துறையினரையும் பாதுகாக்க டாஸ்மாக்கை மூடி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காவலரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article