சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார்.