
சென்னை,
தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கையை, தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தள பக்கத்தில் நேற்றை பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வெளியிட்ட விண்வெளி தொழில் கொள்கை, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியபோதில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், தொடங்கப்பட்ட வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் பங்குதாரராக முதல்-அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் இருக்கிறார். இந்த கொள்கையின் மூலம், அந்த ஸ்பேஸ் நிறுவனம், குறைந்தபட்சம் 20 சதவீதம் மூலதன மானியத்தை பெறும்.
எனவே, இது தொழில் கொள்கை அல்ல. அவர்களின் குடும்பத்தின் கொள்கை. தமிழகம் முதலீடுகளை பெற திணறி வருகிறது. மேலும், 2025-ம் நிதியாண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் போராடி வருகிறது. இந்த சூழலில், தங்கள் குடும்பத்தினர் பயனடைவதற்காக தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது அவமானமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.