தமிழக அரசின் கோரிக்கைகளை பற்றி பேசாத மத்திய நிதி மந்திரி 'ரூ' பற்றி பேசினார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான '₹'-க்கு பதில் தமிழ் எழுத்தான 'ரூ'-வை தமிழக அரசு பயன்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல, இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், 'ரூ' விவகாரம் தொடர்பான சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"மொழி கொள்கையில் நாம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காட்ட பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தோம். ஆனால் தமிழை பிடிக்காதவர்கள் அதை பெரிய செய்தியாக்கிவிட்டனர்.

மத்திய அரசிடம் 100 நாள் வேலைதிட்டத்திற்கான சம்பளத்தை தாருங்கள், பேரிடர் நிதியை தாருங்கள், பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகளை வைத்திருப்பேன். அதையெல்லாம் பற்றி பேசாத மத்திய நிதி மந்திரி 'ரூ' பற்றி பேசினார். அவரே பல பதிவுகளில் 'ரூ' என்றுதான் போட்டிருக்கிறார்.

ஆங்கிலத்திலும் ரூபாயை எளிமையாக 'Rs' என்றுதான் எழுதுகிறார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அளவில் தமிழக பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

'ரூ' என்பது பெரிதானது ஏன்?#TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!#UngalilOruvanAnswers pic.twitter.com/oTl0Kcypq3

— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
Read Entire Article