
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர், விவசாயிகளை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளார். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' அதாவது, உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர். ஏனென்றால் மற்றவர்கள் அவர்களை தொழுதுண்டு வாழவேண்டியதிருக்கிறது என்று உழவர்களை மிக மேன்மையான இடத்தில் வைத்து அந்த குறளை வடித்தெடுத்திருந்தார். புறநானூற்றில் உள்ள ஒரு பாடலில் ஒரு புலவர் மன்னனைப் பார்த்து, 'உழவர்களின் சுமையை நீ குறைத்து அவர்களைப் பேணினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர்' என்று பாடியிருக்கிறார்.
இன்று பகைவர் என்றால், ஏழ்மையும், பசிப்பிணியும், உணவு தட்டுப்பாடும், உணவு பொருட்களின் விலைவாசியையும் கூறலாம். ஆக இந்த பகைவர்களை அரசு வெல்ல வேண்டுமானால், உழவுத்தொழிலையும், உழவர்களையும் மேம்படுத்தச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை நிறைவேற்றும் வகையில்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து, இதுவரையில் 4 வேளாண்மை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துவிட்டு, கடந்தவாரம் சனிக்கிழமை 5-வது வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்து, இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வாழ்வு சிறக்கவும், விவசாயத்தொழில் மேம்படுத்தப்படவும், வேளாண் உற்பத்தி பெருகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கல்லூரிகளில் படித்து பட்டதாரிகளும், பட்டயதாரர்களும் வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்பு அளிக்கின்றன. அதில் கூடுதலாக இந்த ஆண்டு வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களின் திறனை பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இங்கு விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள உபகரணங்கள் வாங்க 30 சதவீத மானியம் அதாவது, ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் மூலம் 1,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் புதுவாழ்வு பெறுவார்கள்.
டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல்சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உணவு உற்பத்தியை உயர்த்தவும் என 2 சிறப்புத்தொகுப்பு வழங்கப்படும். இந்த இருதிட்டங்களிலும் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டதன் மூலம் 9.36 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதும் வரவேற்கத்தக்கது. இதற்கு கூடுதலாக மானாவரி நிலங்களை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவுத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், இந்த எண்ணிக்கையை உயர்த்தலாம். இந்த நிபந்தனையையும் தளர்த்தலாம் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் இருக்கிறது.
உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்குவதற்கென்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கும் பயனளிக்கும், பொது மக்களுக்கும் பயனளிக்கும். இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது என்றாலும், இதன் வெற்றி அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில்தான் இருக்கிறது.