தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம் துணை முதல்வராகிறார் உதயநிதி: இன்று மாலை பதவியேற்பு விழா

3 months ago 21

* செந்தில் பாலாஜி, ஆவடி நாசருக்கு மீண்டும் பதவி
* கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் புதிய அமைச்சர்கள்
* மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் நீக்கம்
* 6 அமைச்சர்கள் இலாகா மாற்றம்

சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார். செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார், சிலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தன.

இது குறித்து பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் கவர்னர் ஆர்.என்.ரவியின் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்த கவர்னர், நேற்று இரவு சென்னை திரும்பியதும், கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகிறார். மேலும், செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. மேலும், அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ் (பால் வளம்), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினர் நலம், வெளிநாட்டு வாழ் தமிழர் நலம்), ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ள மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், பல்வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராகவும், நிதித்துறை மற்றும் மின்வாரியம், மனித வளத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் நிதித்துறை, தொல்லியல் துறைகளையும் கவனிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சரவையில் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை, தங்கம் தென்னரசுவிடம் இருந்த மின்வாரியத்துறை, செஞ்சி மஸ்தானிடம் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை, மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் செந்தில்பாலாஜி மின்வாரியத்துறைக்கும், கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், நாசர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் இன்று அமைச்சரவை பதவி ஏற்புக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில்பாலாஜி, நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததால், ஆர்.ராஜேந்திரன் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சராகிறார். இதனால் அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 2022 மார்ச் 22ம் தேதி, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2022 டிசம்பர் மாதம் 14ம் தேதி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றார். அவருடன் மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவும் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டது. அப்போது பல அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறைக்கும், சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வந்தார். அந்த துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவு துறையும், அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலா துறையும், அமைச்சர் மதிவேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் எம்எல்ஏ, பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். பின்னர் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதைத்தொடர்ந்து பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மார்ச் 22ம் தேதி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு 4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். 6 பேரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து தற்போது தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. சேலம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததால், ஆர்.ராஜேந்திரன் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சராகிறார். இதனால் அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம் துணை முதல்வராகிறார் உதயநிதி: இன்று மாலை பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Read Entire Article