
மும்பை,
மராட்டிய மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஜீஷன் ஷேக்(வயது 19). இவரது நண்பரான ஷாகின் ஷேக்(வயது 16) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி ஜீஷன் சிங்கின் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷாகின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் ஜீஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு கண்விழித்த ஜீஷன், தானும், ஷாகினும் ஒரு குளிர்பானத்தை குடித்ததாகவும், அதன் பிறகு இருவருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாகின் கடைசியாக குடித்த பாலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஜீஷன் உண்மையை ஒப்புக்கொண்டார். கடந்த சில நாட்களாக ஷாகின் தன்னை ஏமாற்றி வந்தது போலவும், தன்னை புறக்கணிப்பது போலவும் உணர்ந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவர் குடித்த பாலில் பூச்சி மருந்தை கலந்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜீஷன் ஷேக் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.