சென்னை: “நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் மறைந்த குமரி அனந்தனின் மகத்தான சாதனை. அவர், தன்னேரில்லாத் தமிழ் தொண்டர், மாசு மருவற்றத் தலைவர்.” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தகைசால் தமிழர், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் தமிழக அரசியல் களத்தில் தனித்ததோர் இடத்தை பெற்றிருந்தவர். நாடறிந்த நல்ல தமிழ் பேச்சாளர், சீரிய சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர் என பன்முக ஆற்றல் மிக்க தலைவராக திகழ்ந்தவர்.