
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் 12- ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே நாளை (03.03.2025) மற்றும் (05.03.2025) அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8.21.057 மாணவ, மாணவியர்களும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் எழுத உள்ளனர்.
கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.