
சென்னை,
நரேன், சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் மகனான பவிஷ் நாராயண் கல்லூரியில் சமையல் கலை படிப்பை படிக்கிறார். இதற்கிடையில் அனிகா சுரேந்திரனையும் காதலிக்கிறார். இந்த காதலுக்கு அனிகாவின் தந்தை சரத்குமார் முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் விரக்தியடைந்த அனிகா திடீரென மாயமாகி போகிறார்.
சில வருடங்களுக்கு பிறகு பிரியா வாரியருடன், பவிஷ் நாராயணுக்கு திருமணம் முடிவாகிறது. திருமண அழைப்பிதழ் அனிகாவின் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
திருமணம் கோவாவில் நடக்கிறது. அங்கு பல்வேறு திருப்பங்கள் அரங்கேறுகின்றன. பவிஷ் நாராயணன் திருமணம் நடந்ததா? அனிகா என்ன ஆனார்? என்பது மீதி கதை.
அறிமுக நாயகனாக களமிறங்கியுள்ள பவிஷ் நாராயணன், முதல் படித்திலேயே சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்துக்கு ஆணிவேர். காதல் காட்சிகளில் கலாட்டாவான அவரது நடிப்பு ரசிப்பு.
அனிகா தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். பணக்கார தந்தையாக கம்பீரமான நடிப்பை சரத்குமார் வழங்கியுள்ளார்.
பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், சித்தார்த்த ஷங்கர், உதய மகேஷ், ஸ்ரீதேவி என அனைவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் கோவாவின் அழகு கண்களை பறிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசையும் சிறப்பு. உணர்வுப்பூர்வமான காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.
காதல், நட்பு என வழக்கமான கதை களத்தில் சுவாரசியமான காட்சிகளை நிரப்பி கலாட்டாவுடன் படத்தை இயக்கிய தனுஷ், டைரக்டராக மீண்டும் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.