
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், "தேரே இஸ்க் மெய்ன்" என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அமரன் படத்தை போலவே இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது 'தனுஷ் 55' படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, " 'தனுஷ் 55' படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கி விடுவோம். அதன்படி ஜூலை மாதத்தில் இந்த படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த படமானது நம்ம இயல்பான வாழ்க்கையில் இந்த மாதிரியான ஆட்கள் இருப்பார்களா என்பதை உணரவே மாட்டோம். நம்ம இயல்பு வாழ்க்கை இயல்பாக இயங்குவதற்கு இவர்களும் முக்கிய காரணம். அப்படிப்பட்ட மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே இருப்பார்கள். அதாவது கவனிக்கப்படாத மனிதர்களை கவனிக்கும் ஒரு படம்" என்று தெரிவித்துள்ளார்.