தனுசு ராசி ஆணின் பொதுப் பண்பு

1 month ago 18

தனுசு ராசியும் அதிர்ஷ்டமும்

தனுசு ராசி ஆண்கள், பூர்வ புண்ணியத்தின் பயனால் இந்த குருராசியில் பிறந்துள்ளனர். எனவே இவர்களுக்கு வெற்றியும் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் அதிகம். இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை எப்போதும் துணை இருப்பாள். மண்ணைத் தோண்டினாலும்
பொன்னாக விளையும்.

தனுசு ஆணின் அடையாளம்

தனுசு ராசி ஆண், படிக்கிற காலத்தில் இருந்தே ஆசிரியருக்குப் பிரியமானவராக இருப்பார். ஆசிரியைகளின் pet child என்றே சொல்லலாம். நன்றாகப் படிப்பார்கள். சேட்டை செய்வதில்லை. கீழ்ப்படிதல் உள்ளவர்கள். குருபக்தி, தெய்வபக்தி உடையவர்கள். நிதானமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வார்கள். மாணவர்கள் மத்தியில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். குரூப்லீடர், டீம்லீடர், ஸ்கூல்லீடர் என்று படிப்பு சம்பந்தப்பட்டவற்றில் தலைவராக இருப்பார்கள்.

வேலைவாய்ப்பு

தனுசு ராசி ஆண், ஆசிரியர், சமயப்பிரசங்கி, நீதிபதி (வக்கீல் அல்ல), மாஜிஸ்திரேட், கல்லூரி முதல்வர், பள்ளிக் கூடத் தலைமை ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், கதை சொல்லி, கர்நாடக சங்கீத வித்வான், பாரம்பரிய இசைக் கருவிகள் வாசிப்பவர், ஆலோசனைக் குழுத் தலைவர் அல்லது உறுப்பினர், ஆற்றுப்படுத்துனர் (கவுன்சலிங்) போன்ற அறிவுரை சொல்லும் பொறுப்புகளில் இருப்பார்.

நல்லது கெட்டதுக்கு

தனுசு ராசி ஆணுக்குச் சொந்தங்கள் பந்தங்களாக இருப்பது அறவே பிடிக்காது. ஆனால் நல்லது கெட்டதுக்கு கண்டிப்பாகப் போய்வருவார். வாழ்த்துவார். உதவுவார். பரிசளிப்பார். ஆனால் தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாமல் உறவாடுவார். தன்னை ஒட்டிக் கொண்டு `ஒட்டுப் புல்’ போல சொந்தங்கள் இருப்பதை விரும்பமாட்டார். தான் சிரமப்பட்டு loss of payல் சொந்தக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்குப் போவது கிடையாது. தன் வசதிப்படி போய் நல்ல பரிசுகளைக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவார்.

சிக்கனம், சேமிப்பு

நிதி மேலாண்மையில் தனுசு ராசிக்காரர் கெட்டிக்காரர். பொதுவாக இவர் ஆடம்பரத்தை விரும்புவது கிடையாது. துணிமணி, நகைநட்டு, ஊர் சுற்றுதல் போன்றவற்றை விரும்ப மாட்டார். இவற்றுக்கு இவர் அதிகமாகப் பணம் செலவழிப்பது கிடையாது. ஒரு பொருள் வாங்கும் போது கலர் டிசைனைவிட உழைப்புக்கு (durabiity) மதிப்பு கொடுப்பார். அதிக காலம் உழைக்கும் பொருளையே வாங்குவார். தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய பின்பு, மீதி பணத்தை மிச்சம் பிடித்து சேமித்து வைப்பார். நிதி மேலாண்மை தெரிந்தவர். இவர் அரிதாக சில வேளை களில் ஊதாரித்தனமாக சில செலவுகளை செய்துவிட்டுப் பின்பு அது குறித்துத் தன் மனதுக்குள் வருத்தப்படுவார். தான் தவறு செய்து விட்டதாக வெளியே சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்.

குழந்தைகள்

தனுசு ராசி ஆண்களுக்கு, குழந்தை களைத் தூக்கிக் கொஞ்சுவதில் விருப்பம் இல்லை. ஆனால் பேசத் தெரிந்த குழந்தைகளைப் பிடிக்கும். அவர்களின் அறிவை ரசிக்கும் வகையில் அவர்களைக் கதை சொல்லச் சொல்லியும், ரைம்ஸ் சொல்லச் சொல்லியும் கேட்டு மகிழ்வார். அவர்களிடம் நல்ல உரையாடலை நிகழ்த்துவார். இவரும் கேள்வி கேட்பார். குழந்தைகளையும் கேள்வி கேட்கச் சொல்லி உற்சாகப்படுத்துவார். அதனால் இவருக்குக் குழந்தை நண்பர்களும்
நிறைய பேர் இருப்பார்கள்.

பொய்மையும் வாய்மையிடத்த

தனுசு ராசிக்காரர், “பொய்மையும் வாய்மை இடத்த’’ என்ற வள்ளுவர் வாக்கில் நம்பிக்கை உள்ளவர். தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்வதற்குச் சில பொய்களைச் சொல்வது இவர் வழக்கம்தான். ஒரு பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற தருணத்தில், இவர் வாயிலிருந்து பொய்கள் வரும். ஆனால் அதற்கு இவர் மனம் அந்தப் பொய்க்கு ஒரு நியாயத்தைக் கற்பிக்கும். எனவே ஏன் பொய் சொன்னீர்கள் என்று இவரை யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. அதற்கான சரியான காரணம் இவர் மனதுக்குள் இருக்கும்.

அறிவே பிரதானம்

தனுசுராசி ஆண்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள் கிடையாது. தங்கள் அறிவைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை உடையவர்கள். எனவே மற்றவர்கள் கருணையோடு பார்க்கும், அலசிப் பார்க்கும் விஷயங்களை இவர் கருத்தியல் சார்ந்து ஆராய்ந்து விளக்குவார்.

தோல்வியும் தோற்றுப் போகும்

பெரிய அறிவாளி என்று இவரை உலகம் புரிந்து வைத்திருக்கும் வேளையில், சில சமயம் இவர் அசட்டுத் துணிச்சலுடன் செயல்பட்டு மண்ணைக் கவ்வுவார். ஆனால் கவிழ்ந்த வேகத்தில் மீண்டும் எழுந்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார். தோல்விகூட இவரிடம் தோற்று ஓடும். இவருடைய வாழ்க்கையில் பெரிய தோல்விகள் என்பது இருக்காது. எந்தத் தோல்வியும் இவரை அதிகமாகப் பாதிக்காது. தோல்வி என்று பிறர் கருதுவதுகூட இவருக்கு
வெற்றியின் முதல் படிக்கட்டுதான்.

பாராட்டுவோர் எதிரிகள்

தனுசு ராசி ஆண், தனது மிகப் பெரிய உலகம் வியந்த வெற்றிக்குக்கூட பாராட்டுகளை எதிர்பார்க்க மாட்டார். காரணம், வெற்றி என்பது தன்கூடப் பிறந்தது, வெற்றி வேறு நான் வேறு அல்ல, என் அறிவே என் வெற்றிக்கு ஆதாரம் என்ற நம்பிக்கை உடையவர். அகம்பாவம் பிடித்தவர். ஆதலால் இவரிடம் வந்து யாராவது அவருடைய வெற்றியைப் பாராட்டி பேசினால், அவர்கள் முகத்தில் அடித்தது போல் பேசி விரட்டிவிடுவார். தன் அறிவை மட்டுமே துணை கொண்டு செயல்படும் தனுசு ராசி ஆண்களுக்கு, ஊரும், உறவும், பாராட்டும் பரிசும் வெகுதூரம் தான்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

 

The post தனுசு ராசி ஆணின் பொதுப் பண்பு appeared first on Dinakaran.

Read Entire Article