தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு: காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

2 months ago 8

திருவொற்றியூர்: மணலியில் உள்ள பயோ காஸ் நிறுவனத்தில் மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களின் உறுதி தன்மையை முழுமையாக ஆய்வு செய்யும் வரை, காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர். மணலி மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயோ காஸ் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் இங்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து பயோ காஸ் தயாரித்து, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், இன்ஜினியராக பணிபுரிந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் (25), லாரி டிரைவராக பணிபுரியும் பொன்னேரியை சேர்ந்த பாஸ்கர் (25) ஆகிய இருவரும், கடந்த சனிக்கிழமை இரவு, காஸ் சுத்திகரிப்பு கட்டுப்பாட்டு அறையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த இயந்திரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. .இதில் கட்டுப்பாட்டு அறை முழுவதும் இடிந்து, உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சரவணகுமார், பாஸ்கர் ஆகியோர் மீது கட்டிட கழிவு விழுந்தது.

இந்த வெடிச்சத்தம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதால், சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயோ காஸ் நிறுவனம் முன்பு குவிந்தனர். தகவலறிந்த மணலி போலீசார் மற்றும் மணலி எண்ணூர் பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், சிறப்பு மீட்பு குழுவினர் என 50க்கும் மேற்பட்டோர் பயோ காஸ் நிறுவனத்தின் உள்ளே சென்று, கட்டிட இடுபாடுகளில் சிக்கி, பலத்த காயங்களுடன் இருந்த பாஸ்கரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணகுமார் மீது கான்கிரீட் தூண்கள் விழுந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் 3 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து, 2 மணி நேரம் போராடி சரவணகுமாரை சடலமாக மீட்டனர். பின்னர், மணலி போலீசார், சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும், அதுவரை நிறுவனம் இயங்குவதற்கு அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி தற்காலிகமாக இந்த காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மின்சாரத்தில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக இயந்திரம் வெடித்து சிதறியதாக பயோ காஸ் நிறுவன அதிகாரிகள் விளக்கம் கொடுத்தாலும், உறுதியான கான்கிரீட் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகும் அளவுக்கு பாதிப்பு இருந்ததால், விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் தான் உண்மையான காரணமா என்று கண்டறிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் விபத்து தொடர்பான பிரத்தியேக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் சோதனையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் இந்த சோதனையில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்த நிலையில் இந்த பயோ காஸ் நிறுவனத்தில் உள்ள மற்ற இயந்திரங்கள், மின் சாதனங்கள் பாதுகாப்பு தன்மையுடன் உள்ளதா என்பதை முழுமையாக கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் இந்த பயோ காஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவதில் பல நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனிடையே சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்ட ரவி தேஜா, செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று இந்த பயோ காஸ் நிறுவனத்திற்கு வந்து விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது பயோ காஸ் உற்பத்தி கட்டமைப்புக்காக கொடுக்கப்பட்ட அனுமதிகள், திட்ட வரைபடங்கள், உற்பத்தி இயந்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

* நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பயோ காஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள பல இடங்களில் பயோ காஸ் நிறுவனத்தில் இருந்து எந்த துர்நாற்றம் வராத நிலையில், இங்கு நிறுவனத்திலிருந்து பல மாதங்களாக துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் இதன் மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தின் காரணமாக நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுற்று வட்டாரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதி, இந்த விபத்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து உற்பத்தி கட்டமைப்புகளையும் 100% பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மீண்டும் நிறுவனம் இயங்க அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பயோ காஸ், பிரத்தியேக டேங்குகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தபடாமல் பல நாட்களாக பயோ காஸ் அடைத்து வைத்திருந்தால் அதன் தன்மை மாறி, பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு: காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article