சென்னை: “இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பை இந்தியாவின் தெற்கு ஏன் எதிர்க்கிறது” என்பது குறித்து உலகப் புகழ்பெற்ற ‘தி எகானமிஸ்ட்’ இதழின் ‘ஆசியா’ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவது என்பது, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்வியலின் ஒரு அங்கமாகிவிட்டது. பதின்ம வயதில் அரசியலுக்குள் நுழைந்த அவர், மாநில சுயாட்சிக்கான நகர்வுகளிலும், வடஇந்திய ஆதிக்க மொழியான இந்தி மொழியை தேசிய மொழியாக நிலைநாட்டுவதை தடுக்கும் முயற்சியிலும் தனது தந்தைக்கு உறுதுணையாக இருந்தார். 23 வயதில், 1975-77 காலக்கட்டத்தில் சிவில் உரிமைகளை பறிக்கும் நெருக்கடி நிலையை கொண்டுவந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதைய தாக்குதலில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இப்போதும் அவரது வலது கையில் உள்ளது.
இப்போது 72 வயதில், அவருடைய அரசியல் வாழ்க்கையை வரையறுக்கும் மற்றும் இந்திய அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் தேசிய அதிகாரத்துடனான தனது போராட்டத்தின் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களுக்கான இடங்களை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். மக்கள்தொகை அதிகம் கொண்ட – ஏழ்மையான வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் செல்லும் எனும் அச்சத்தின் காரணமாக இதற்கு எதிரான முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்துகிறார். கடந்த மார்ச் 22ம் நாள், ஸ்டாலின் நான்கு மாநில அரசியல் தலைவர்களை கொண்ட ‘கூட்டு நடவடிக்கைக் குழு’-வின் முதலாவது கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு (1976-லும் 2001-லும் செய்ததை போல) தள்ளிவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த அரசின் திட்டம் குறித்து அமித்ஷாவுக்கு அத்தனை தெளிவு இருப்பின், அதனை பொதுக்கூட்டங்களில் சாதாரண கருத்துகளாக வெளியிடுவதை விட, நாடாளுமன்றத்தில் முறையாக முன்வைக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின். மேலும் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை (2016), இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை ரத்து செய்தது உள்ளிட்ட திடீர் மாற்றங்களை திணித்ததை சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சர்ச்சை, இந்தியாவின் வடக்கு மற்றும் தென்மாநிலங்கள் இடையே அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு பிளவை ஆழப்படுத்துவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது. மோடியின் இந்துத்துவ தேசிய வாதத்தின் மீதான தெற்கின் வெறுப்பும் தென்மாநிலங்கள் பொருளாதார – சமூக வளர்ச்சியில் முன்னேறி இருப்பதும் அண்மைக் காலங்களில் இது வெளிப்படையாக வளர்ந்திருப்பதற்கு காரணமாகும். பெரும்பாலான தென்னிந்திய மக்கள் தற்போது தாங்கள் செலுத்தும் வரியின் பெரும் பகுதி வடமாநிலங்களுக்கு செலவிடப்படுவதாக உணர்கிறார்கள்.
ஸ்டாலினை பொருத்தவரை இது ஒரு நீண்டகால போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் அடையாளத்தை நசுக்கி, இந்திய துணைக்கண்டத்தின் நாகரிகத்தில் தெற்கின் பண்பாடு ஆற்றியுள்ள பங்களிப்பை அழிக்க பாஜக முனைகிறது என அவதானிக்கிறார். பாஜக ஆதரவாளர்கள் அவரின் இந்த முயற்சிகளை எள்ளி நகையாடலாம். ஆனால், தமிழ் அடையாளம் மிக வீரியமிக்க அரசியல் ஆற்றல் ஆகும். இந்த போராட்டங்களையெல்லாம் வழிநடத்த உதவிய தனது தந்தையின் வழித்தடத்தில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபோடவில்லை; வரலாற்றில் தனக்கான இடத்தை அவர் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தனது தந்தையின் வழித்தடத்தில் மட்டும் நடைபோடவில்லை; வரலாற்றில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: உலக புகழ்பெற்ற பத்திரிகை பாராட்டு appeared first on Dinakaran.