‘‘அதிகார மையத்திற்கும் ஆளும் தரப்புக்கும் இடையேயான உரசலால் குற்றச்சம்பவங்கள் ெதாடர்பான பைல்கள் சுத்திக்கிட்டு இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் சமீபத்திய குற்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கையை எடுக்காமல் சில அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்ததாம்.. இதன் எதிரொலியாக காவல் நிலையங்களில் அதிகாரிகள் பணியிட மாறுதல்கள் இருந்துச்சாம்.. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் ரேங்கிலான இடமாற்றம் இழுபறியில் நீடிக்கிறதாம்..
மூன்று மாதங்களுக்கு முன்பே இதற்கான கோப்பை தயாரித்து முக்கிய இடங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் அதிகார மையத்துக்கும், ஆளும் தரப்புக்கும் இடையிலான உரசல் காரணமாக பைல்கள் தொடர்ந்து சுற்றுகிறதாம்.. இதனால் சில அதிகாரிகள் தங்களது பணியில் மேலும் சுணக்கத்தை பகிரங்கமாக வெளிக்காட்ட துவங்கி விட்டார்களாம்.. இந்த விவகாரத்தால் காக்கித் துறையில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.. என்றார் விக்கியானந்தா.
‘‘தனக்கு பாராட்டு விழா நடத்தியே ஆகணும்னு ஒற்றைக்காலில் நிற்கிறாராமே இலைக்கட்சி தலைவர் என்னவாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது செயல்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை கடைசி நேரத்தில் அவசரமாக தொடங்கி வைச்சாராம் இலைக்கட்சி தலைவர். அதன்பிறகு வந்த ஆட்சி, பொதுமக்களின் பணம் வீணாகிப்போய் விடக்கூடாது என்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கிடையில் அந்த திட்டங்களையெல்லாம் செயல்படுத்திகிட்டு வர்றாங்களாம்..
இதற்காக ஆட்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கிறாங்க.. இப்படித்தான் மேட்டூரில் உபரிநீர் திட்டத்தின் மூலம் நூறு ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை இலைக்கட்சி தலைவர் அறிவிச்சதோடு மட்டுமல்லாமல் தொடங்கியும் வச்சாராம்.. அதன்பிறகு வந்த ஆட்சியில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, நிலத்தை கையகப்படுத்தி, 65 ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்பினாங்களாம்.. இன்னும் நிலஎடுப்பு பணிகள் நடந்துக்கிட்டு வருதாம்..
ஆனால் இந்த திட்டத்தை இலைக்கட்சி தலைவர் நிறைவேற்றியதாக, கட்சி நிர்வாகிகளை வைத்து தனக்கு தானே பாராட்டு விழாவை நடத்திக்கிட்டாராம்.. இந்த உண்மை மேட்டூர் சுற்றுவட்டார மக்களுக்கு தெரிஞ்சிப்போச்சாம். இதேபோல் இன்னொரு பாராட்டு விழாவையும் இலைக்கட்சி தலைவர் ஏற்பாடு செஞ்சிருக்காராம்.. அதுதான் அவிநாசி-அத்திக்கடவு திட்டமாம்.. மேட்டூர் உபரிநீர் திட்டத்தை இலைக்கட்சி ஆட்சியின்போது எப்படி கைவிட்டுட்டு போனாங்களோ, அதேபோலத்தான் இந்த அத்திக்கடவு திட்டமும் இருந்திச்சாம்..
என்றாலும் தனக்கு பாராட்டு விழா நடத்தியே ஆகணுமுன்னு ஒத்தைக்காலில் நிற்காராம்.. மலராத கட்சி டெல்லியில் இருந்து கூட்டணியில் சேர்ந்தே ஆகணுமுன்னு மிரட்டுறாங்களாம்.. எங்களையும் கட்சியில் சேருங்கன்னு தேனிக்காரர் கூட்டம் ஒருபக்கமாம்.. உருப்படியாக எந்த கட்சியும் கூட்டணிக்கு வர மறுப்பது இன்னொரு பக்க வேதனையாம்.. இப்படி எல்லா பக்கமும் இலைக்கட்சி தலைவருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காம்.. இந்த சோதனையில் இருந்து தப்பிக்க தனக்கு ஒரு பூஸ்ட் வேணும்ன்னு நினைக்கிறாராம்..
இதனால விவசாயிகள் மூலமா ஒரு பாராட்டு விழா நடத்திடலாமுன்னு கொங்கு மணிக்காரர் ஏற்பாடு ஒன்றை செஞ்சிருக்காராம்.. பாராட்டு விழாவில் புதுத்தெம்பு கிடைக்கும். அதே வேகத்துல சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெருக்கடியில் இருந்து தப்பிச்சிடலாமுன்னு இலைக்கட்சி தலைவரின் திட்டமாம்.. அதன்படியே அவருக்கு பாராட்டு விழா நடக்கப்போவுதாம்.. இதனால அவர் ரொம்பவே ஹேப்பியாக இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியில் ஐக்கியமான நாட்டாமை எம்எல்ஏ சீட்டுக்கு குறி வைக்கிறது, பல மூத்த நிர்வாகிகளை கொதிப்படைய செய்து இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மனைவி சொன்னதால் கட்சியை கலைத்துவிட்டு, மலராத கட்சியில் ஐக்கியமான நாட்டாமை கணக்கு தற்போது வேறு மாதிரி இருக்கிறதாம்.. அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் மெடல் மாவட்டத்தில் போட்டியிட இவர் திட்டமிட்டுள்ளாராம்.. ஏற்கனவே, வெள்ளோட்டமாக எம்பி தேர்தலில் களமிறக்கி நோட்டம் பார்த்தார்.
இதில், தோல்வியை தழுவினாலும் பிரசாரத்தின்போது கடைசி வரை உடன் சென்றது தனக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் வலம் வருகிறார். இதனால், மலராத கட்சியில் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும், மெடல் மாவட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ரகசியமாய் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என கலக்கலான கறி விருந்து மற்றும் உயர்ரக சைவ விருந்து வைத்துள்ளார். இதேபோல் தொகுதியின் மேலும் 2 இடங்களில் தனது ஆதரவாளர்களை மட்டும் அழைத்து செமையாக விருந்து கொடுத்துள்ளார்.
தனது செல்வாக்கை மலராத கட்சியின் தலைமைக்கு காட்டவும், ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருது.. ஏற்கனவே, எம்பி தேர்தலில் பலரது பெயர் அடிபட்ட நிலையில், கடைசி நேரத்தில் கட்சியை கலைத்த நாட்டாமை மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதுவே கட்சியின் பல சீனியர்களை அந்த நேரத்தில் அதிருப்தி அடைய வைத்தது.
தற்போது எம்எல்ஏ சீட்டுக்கு குறி வைக்கிறாரா? எங்களுக்குத்தான் சீட் தரணும்… மீறி தலைமை கொடுத்தால், தேர்தல் வேலைகளை பார்க்க மாட்டோமென மூத்த நிர்வாகிகள் தரப்பு கூறி வருகிறதாம்.. ஆனால், எனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு கேட்டுள்ளேன். அதை வைத்து நான் எங்கு வேண்டுமானாலும் சீட் வாங்குவேன் என எல்லோரிடமும் கூறி வருகிறாராம் நாட்டாமை..’’ என்றார் விக்கியானந்தா.
The post தனக்கு பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.