திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக இணை பொதுச்செயலாளருமான அருள் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டி: தலைவர் முதல் கிளை செயலாளர் வரை நிர்வாகிகளை நியமிக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே. ராமதாசுடன் இருப்பவர்கள் விசுவாசிகள் கூட்டம். ஆனால் இன்று பதவிக்காக பெற்ற தந்தையை விட்டு செல்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அன்புமணி மாறிவிடுவாரோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது. தந்தைக்கு கட்டுப்பட்டவர் மகனாக இருக்க வேண்டும். இது தான் கிராமங்களில் பாரம்பரியமாக, தமிழ் பண்பாடாக இருந்து வருகிறது. ஆனால் தந்தைக்கு மகன் கட்டுப்பட மாட்டேன் என்ற அன்புமணியின் போக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு அன்புமணி ஆளாகிவிட கூடாது. வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
* பாமகவை உடைக்க முயற்சிக்கிறார் அருள் முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாமக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், அன்புமணி பற்றி தவறாக பேசி வருகிறார். அவர் பாமக எம்எல்ஏவாக இருப்பதால், நாங்கள் பொறுமை காக்கிறோம். 45 ஆண்டுகளாக ராமதாசுடன் உழைத்து விட்டு, தற்போது நாங்கள் அமைதியாக இல்லையா?. பாமகவின் உட்கட்சி விவகாரம் சரியாகி விடக்கூடாது என்பதற்காக, அருள் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அவரது செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். அன்புமணி குறித்து அருள் இனியும் தவறாக பேசினால், பொறுத்துக் கொள்ள முடியாது.
யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தோம் என்று கூட ராமதாசுக்கு ஞாபகம் கிடையாது. யார் எழுதி கொடுத்து, அவர் படிக்கிறார்?. பாமகவால் அருளுக்கு அச்சுறுத்தல் கிடையாது. வேறு காரணங்களால் இருக்கிறது என்றால், அவர் போலீசில் புகார் கொடுக்கலாம். ராமதாஸ் கருணை கொலை என்கிற வார்த்தை அருளின் வாயில் ஏன் வந்தது?. ராமதாசின் அருகே இருந்து கொண்டு, சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அன்புமணி 3 ஆண்டுகள் தலைவராக இருந்த போதும் கூட, 3 மாதம் மட்டுமே நியமன கடிதங்களில் அவரின் கையெழுத்து இருந்தது. அதிகாரத்தை மீறி நிறுவனரின் கையெழுத்து தான் இடம் பெற்றது. ராமதாசுடன் இருக்கும் 4 பேர் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள ஒருவர், பிரச்னையை தீர்க்க விடுவார்களா என்று தான் தெரியவில்லை. கட்சியை உடைக்கும் நோக்கில் அருள் செயல்படுகிறார். கட்சியில் தலைவரை மாற்றுவது குறித்து, 108 மாவட்ட செயலாளர்களை அழைத்து ராமதாஸ் ஏன் கருத்து கேட்கவில்லை?. இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தெரிவித்தார்.
The post தந்தைக்கு மகன் கட்டுப்பட மாட்டேன் என்பதா? தமிழ் பண்பாட்டுக்கு தவறான முன்னுதாரணம் அன்புமணி; பாமக எம்எல்ஏ கண்டனம் appeared first on Dinakaran.