தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது: நீலாங்கரையில் பரபரப்பு

5 months ago 13

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவருகிறார். இதனால் அவரது பேச்சுக்கு ஆதாரங்களைத் தரவேண்டும் என்று பெரியார் தி.க.தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சில நாட்களுக்கு முன்னர் சீமான் வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. ஆனாலும் தொடரந்து அதேபோல சீமான் தொடர்ந்து பேசத் தொடங்கினார். இந்நிலையில், நேற்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ்புலிகள், தமிழ்புலிகள் கட்சி, விடுதலைகளம், ஆதிதமிழர் பேரவை, பெரியார் சிந்தனையாளர்கள், மக்கள் விடுதலை முன்னணி, திராவிடர் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் பாலவாக்கத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர், தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கண்டித்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தின்போது, சீமானை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் சீமானின் உருவ படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தபடியும் வந்தனர். சீமான் வீட்டை முற்றுகையிட போவதாக போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாலவாக்கம் சர்ச் நுழைவாயில் அருகில் முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாததால் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பிறகு அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தனர். பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

* உருட்டுக் கட்டைகளுடன் சீமான் ஆதரவாளர்கள்
சீமான் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ள தகவல் வெளியானதால் அவரது ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டைகளுடன் திரண்டனர். அவர்கள், பெரியாரிய ஆதரவாளர்களை தாக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசாரும் வீட்டின் அருகே குவிக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் சீமான் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்களுக்காக பிரியாணி விருந்தும் வைக்கப்பட்டது. பிரியாணி சமைத்து சூடாக வழங்கினர். முதல் நாள் இரவே பக்கத்து பகுதிகளில் உள்ள ரிசார்டுகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த ரிசார்டுகளில் கள், மது உள்ளிட்டவைகள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வீடியோக்களும் வெளியாகின.

The post தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது: நீலாங்கரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article