தண்டவாளத்தில் கற்கள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதியா?

2 weeks ago 5

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு வழக்கம்போல் ரெயில் புறப்பட்டு சென்றது.

இரவு 7 மணியளவில் கடையநல்லூரைக் கடந்து போகநல்லூர் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாளத்தின் நடுவில் முறையே சுமார் 10 கிலோ, 15 கிலோ எடை கொண்ட 2 பெரிய கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்து என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் அவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.

ரெயில் நின்றதும் கீழே இறங்கி சென்ற என்ஜின் டிரைவர், தண்டவாளத்தின் நடுவில் இருந்த பெரிய கற்களை அகற்றினார். பின்னர் ரெயிலை ஓட்டிச் சென்ற அவர், இதுகுறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தண்டவாளத்தில் இருந்த பெரிய கற்களைப் பார்த்ததும் என்ஜின் டிரைவர் சரியான நேரத்தில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில், துணை சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் நேற்று காலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினர். தண்டவாளத்தையும் ஆய்வு செய்தனர். மர்மநபர்கள் யாரேனும் ரெயிலை கவிழ்க்கும் சதியில் இந்த கற்களை வைத்தனரா? அல்லது வேறு யாரேனும் விளையாட்டுக்காக கற்களை வைத்தனரா? என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் கடையநல்லூர் அருகே சங்கனாபேரி பகுதியில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க முயன்றதாக வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களது செல்போனில், ரெயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த வீடியோ இருந்ததால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் 2-வது முறையாக அதே பகுதியில் ரெயிலை கவிழ்க்கும் வகையில் தண்டவாளத்தின் நடுவில் பெரிய கற்கள் வைக்கப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article