
சேலம்,
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று இரவு 3-வது நடைமேடையில் ரெயில் புறப்படுவதற்காக தயார் நிலையில் நின்றது. சரியாக 9.07 மணிக்கு ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு 9.27 மணிக்கு சென்றது. அங்கு பயணிகள் ஏறிய பிறகு 9.33 மணிக்கு சேலம் நோக்கி புறப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் ரெயில் சென்று கொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இரும்பு கம்பி கிடந்ததாக தெரிகிறது. இதனால் என்ஜின் டிரைவருக்கு சத்தம் கேட்டுள்ளது.உடனே என்ஜின் டிரைவர் மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்துக்கு சுமார் 2 கி.மீ. முன்பாக நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்தனர். உடனே அவர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீளமுள்ள இரும்பு கம்பி கிடந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி எதுவும் நடந்ததா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரும்பு கம்பியை வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.