தட்டி எழுப்பிய குரல்கள்

4 weeks ago 7

இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25ம்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் (டிசம்பர் 20) வரை நடந்தது. கூட்டத்ெதாடர் தொடங்குவதற்கு முன்பே, அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆளும் ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. கூட்டத்தொடரில் தான்சார்ந்த கட்சியின் முகமாக தீட்டி வைத்திருந்த அஜென்டாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்தது ஒன்றிய அரசு.

ஆனால் இதைபொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் குரலாக அவையில் ஓங்கி ஒலித்தனர் எதிர்க்கட்சி எம்பிக்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல், வக்புவாரிய மசோதா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல், சட்டப்பிரிவு 370 நீக்கம், மணிப்பூரில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரம், அதானி விவகாரம்’’ என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் திக்கித்திணறி நின்றது ஒன்றிய அரசு. இதேபோல் சட்டமேதை அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு, துணை ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்று அனைத்தும் மக்கள் மன்றத்தில் பரவலாக பேசப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் நமது தமிழ்நிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. அதாவது மக்களவையானது 54.5 சதவீதமும், மாநிலங்களவை 40 சதவீதமும் தான் இயங்கியது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தவகையில் பல்வேறு களேபரங்கள் நடந்த சூழலிலும் ஒவ்வொரு திமுக உறுப்பினரும் மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்துள்ளனர்.

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து குறித்து நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, அவைக்கு பிரதமரே வருவதில்லை என்பதை சுட்டிக்காட்டி திருச்சி சிவா, கேசவானந்தபாரதி வழக்கு என்று அரசியல் சட்ட நுணுக்கத்துடன் ஆ.ராசா, மாநில உரிமைகள், மதவாத அரசியல் குறித்து ஜெகத்ரட்சகன், வானிலை அறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாடு குறித்து தயாநிதி மாறன்,’’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பேசி ஒன்றிய அரசை தட்டி எழுப்பினர்,’’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் நமது முதல்வர்.

2024 நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆளும் கட்சியை விட, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாணியில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். நமது மாநிலத்தின் உறுப்பினர்கள் முன்வைக்கும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், கோரிக்கைகள் என்பது நாட்டுக்கே தேவையான ஒன்றாக உள்ளது. இதன்காரணமாகவே மற்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர்.

நாற்பதுக்கு நாற்பது என்றொரு தேர்தல் வெற்றி கிடைத்தது. இவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப்போகிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் திராவிட முன்னேற்றகழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்று பதிலடி ஒன்றையும் முதல்வர் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்து மண்ணில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள இவர்கள் அனைவரும் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட ஆற்றலாளர்கள் என்பதையும் கோடிட்டு காட்டி அவர்களின் தனித்துவத்தையும் உணர்த்தியுள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தட்டி எழுப்பிய குரல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article