தடைகளை அகற்றி வெற்றி தரும் தைப்பூச விழா!

3 months ago 14

11.2.2025 தைப்பூசம்

1. முன்னுரை

தை மாதம் பல அற்புதமான விழாக்களையும் உற்சவங்களையும் தன்னகத்தே கொண்ட மாதம். இந்த மாதத்தில்தான் பொங்கல் பண்டிகை, ரத சப்தமி, தை வெள்ளி. தை கிருத்திகை, தை அமாவாசை, தைப்பூசம் முதலிய அருள் தினங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய அருள் தினத்தில், முக்கியமான தைப் பூசத்தை ஒட்டி எல்லா ஆலயங்களிலும் திருவிழாக்கள் நிகழ்வதால் தைப்பூசத்தின் சிறப்பை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

2. பூச நட்சத்திரம்

பூசம் என்பது எட்டாவது நட்சத்திரம். எட்டாததை எட்ட வைக்கும் நட்சத்திரம். பூசம் நட்சத்திரம் சனிக்குரிய நட்சத்திரம். சனிக்குரிய ராசியில் சூரியன் பிரவேசித்திருக்க, சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் பூச நட்சத்திரத்தில் பிரவேசித்து, ஒருவருக்கொருவர் நேர் எதிராக பார்த்துக் கொள்ளும் பொழுதுதான் தைப்பூச விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் பௌர்ணமி ஆகவும் அமைகிறது. சூரியனின் இரண்டு பயணங்களில் வடக்கு நோக்கி நகரும் உத்தராயன பயணத்தின் முதல் மாதமாகிய தை மாதத்தின் பௌர்ணமியில் நடக்கக்கூடிய விசேஷம்தான் தைப்பூசம். கடக ராசியில், புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற மூன்று நட்சத்திரங்கள் இருக்க, அதில் மத்திய நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசமாக ஜொலிக்கும் பொழுது தைப்பூசம் நிகழ்கிறது.

3. தையும் பூசமும்

தைப்பூசம் விவசாயிகளுக்கு உரிய விழாவாகவும் இருக்கின்றது. இந்த பூச நாளில் புதிய நெல் அறுத்து புத்தரிசி ஆக்கி, தேங்காய் கலந்து அதனை நிவேதனமாக செய்து உண்ணும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு தைப்பூசம் நடைபெறும் பொழுது (11.2.2025) சூரியன் மகரத்தில் இருக்க குரு ரிஷபத்தில் இருந்து அவரைப் பார்க்கும் அற்புத யோகத்தில் நடைபெறுகின்றது. இது கேரளாவில் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக, “பொருந்திய தைப் பூசமாடி உலகம் பொலிவெய்த’’ என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன.

4. வானியல் விதிகளில் தைப் பூசம்

பூச நட்சத்திரம் சனிக்கு உரிய நட்சத்திரமாக இருந்தாலும், நட்சத்திரத்தின் அதி தேவதையாக குரு பகவான் விளங்குகின்றார். இந்த ஆண்டு குருபகவான், தான் ரிஷப ராசியில் இருந்து மகர ராசியை 9ம் பார்வையால் பார்வையிடுகின்றார். பொதுவாக புனிதமான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த மகான்களாகவும், அறிஞர்களாகவும் இருப்பார்கள். சனி குரு புதன் என்ற இணைப்பில்தான் இந்த நட்சத்திரம் வரும். உதாரணமாக, கடக ராசியில் குருவுக்குரிய புனர்பூசம், சனிக்கு உரிய பூசம், புதனுக்குரிய ஆயில்யம் இணைகின்றது.

அதற்கு அடுத்து விருச்சிக ராசியில் இதே அமைப்பு விசாகம், அனுஷம், கேட்டை என்று அமைகிறது. அடுத்து மூன்றாவதாக, 12வது ராசியான மீன ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்ற மூன்று நட்சத்திரங்கள் அமைகின்றன. தொண்டுக்கே கோலம் பூண்ட பரமபாகவதர்களும், இறை அடியார்களும், வேதமறிந்த அறிஞர்களும் இந்த நட்சத்திரத்தில் அவதரிக்கின்றனர். கடக ராசியில், பூச நட்சத்திரத்தில்தான் குரு பகவான் உச்சமடைகின்றார். எனவே, தைப்பூச நாளில் இறைவனை வணங்குகின்ற பொழுது சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனபலமும் ஏற்படுகிறது, இந்த இரண்டு பலமும் அமைந்தால், அவர்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்குகின்றது. வெற்றி மேல் வெற்றி வந்து சேருகின்றது.

5. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர்கள்

பூச நட்சத்திரத்தை புஷ்ய நட்சத்திரம் என்று சொல்லுவார்கள். ஒளி மிகுந்த இந்த நட்சத்திரம். வானில் நீண்ட அன்பு கூடை போலத் தெரியும். சில நேரங்களில் இந்த அமைப்பு புடலம்பூ போல இருக்கும் இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்திருக்கிறது. கடக ராசி பெண் ராசி. நீர் ராசி. எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் பிறர் மீது கருணையோடும் தாய்மை உள்ளத்தோடும் இருப்பார்கள். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர்களாக இருப்பார்கள்.

சந்திரனுடைய ராசி என்பதால் மனதில் உறுதியும் வைராக்கியமும் இருக்கும். அறிவார்ந்தவர்களாக குறிப்பாக, மெய்ஞானம் அறிந்தவர்களாக இருப்பார்கள். கோள்களிலே மிக வேகமாக நகரும் சந்திரன் என்பதால், இந்த நட்சத்திரம் அமைந்த கடக ராசியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்புடனும் மனவலிமையுடனும் முயற்சியை விட்டுவிடாதவர்களாகவும், கற்பனை மிகுந்தவர்களாகவும், ராஜதந்திரத்தில் தேர்ந்தவர்களாகவும், பேசும்போது கவர்ச்சியும் இனிமையும் கலந்த பேச்சினை பேசுபவர்களாகவும், விட்டுத்தரும் இயல்புடையவர்களாகவும் கல்வி மான்களாகவும், திகழ்வார்கள்.

6. தாரகாசுரனை வதைத்த தைப்பூசம்

தை பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. தாருகாசுரன் சூரபத்மனுடைய தம்பி. மிகப்பெரிய வரம் பெற்றவன். தாருகாசுரன் வஜ்ரங்கா, வஜ்ரங்கி ஆகியோரின் மகன். தாரகாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர். தாரகாக்ஷா, வித்யுன்மாலி மற்றும் கமலாக்ஷா, அவர்கள் திரிபுராசுரன் என்று அழைக்கப்பட்டனர். தாரகன் பிரம்மாவிடம் தவம் செய்து, இரண்டு வரங்களைக் கேட்டான்; ஒன்று, மூன்று உலகங்களிலும் தனக்கு இணையாக யாரும் இருக்கக்கூடாது, இரண்டு, சிவனின் மகன் மட்டுமே அவரைக் கொல்ல முடியும். அவன் கேட்ட வரத்தின்படி, சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகன் தாரகனைவதம் செய்தார். ஆணவமும் பொறாமையும் எத்தனை சக்தி படைத்ததாக இருந்தாலும் அழிக்கப்படும் என்பதன் குறியீடு, தை பூசத்தில் நிகழ்ந்த தாருகாசுரன் வதம்.

7. வேல் தந்த தைப்பூசம்

தைப்பூசம் என்பது சகல தேவதைகளுக்கும் உரிய விழாவாக இருந்தாலும், முதலில் நினைவுக்கு வருவது முருகப் பெருமான்தான். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்று சொல்லும் வழக்காறு உண்டு. அது உண்மைதான். எந்தச் சங்கடங்களையும் தன்னுடைய கூர்மையான வேலினால் நீக்கி அவர்களுக்கு நல்லருள் புரிவதில் முருகப்பெருமான் தனித்துவத்தோடு விளங்குகின்றார். ஆண்டிக் கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு, அன்னை பராசக்தி ஞான வேல் வழங்கியது இந்த தைப்பூச திருநாளில்தான் என புராணங்கள் சொல்கின்றன. எந்த ஒரு குழந்தைக்கும் தாய் தந்தையிடம் இருந்துதான் ஞான சக்தி கிடைக்கும்.

அதை வைத்துதான் அக்குழந்தை தனது வாழ்நாளில் வெற்றி அடையும். முருகப் பெருமானுக்குக் கிடைத்த ஞான வேலும் அவ்வாறுதான். பூச நட்சத்திரம் வேல் வடிவிலான நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாத இறுதியில் இருந்து பிப்ரவரி இறுதிவரை இரவு நேரங்களில் வானில் தெளிவாகக் காணலாம். வேலின் வடிவம் ஞான வடிவானதாகும். அதன் பெயரே ஞானவேல், வெற்றிவேல்தான். அறிவால்தான் அறியாமையை அகற்ற முடியும். ஒளியால்தான் இருளை அகற்ற முடியும். அசுரன் என்பது இருள். அறியாமை. மயக்கம். அதை அகற்றும் அறிவும் ஒளியும்தான் முருகன் வேல்.

8. பழனியில் தைப்பூசம்

தைப்பூச விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தில் கொண்டாடப்படும் பெருவிழாவாகும். பழனியில் இவ்விழா பெருவிழாவாக (பிரமோற்சவம்) கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான், தனக்கு கிடைக்க வேண்டிய ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து தனது பெற்றோர்களான சிவன் – பார்வதி – விநாயகர் ஆகியோர் மீது வெறுப்புற்று பண்டார கோலத்தில் பழநி மலையில் குடியேறிய நாளே தை பூசம் என்பதால், அங்கு இந்த நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு 10 நாட்கள் விழாவாக தைப்பூச விழா நடைபெறும்.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே கொடியேற்றப்பட்டு, இந்த விழா நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.

9. திருத்தணியில் தைப்பூசம்

ஆறுபடைவீடுகளில் ஐந்தாம்படை வீடு திருத்தணி. மலையும் மலையின் மீது கோயிலும் என கொள்ளை அழகுடன் காட்சி தரும் திருத்தணி குறித்து நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் குறிப்பு உள்ளது. முத்துசாமி தீட்சிதர் இந்தத் தலத்து முருகப் பெருமானைப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலங்களில் திருத்தணியும் ஒன்று. சூரபத்மனை அழித்தொழித்து கோபம் தாளாமல் இருந்த முருகப் பெருமான், கோபத்தை துறந்து அமர்ந்த இடமே திருத்தணி.

முருகன் கோபம் தணிந்த தலமாதலால், தணிகை என்றும் திருத்தணிகை என்றும் ஸ்தலத்துக்கு பெயர் அமைந்தது. முருகப் பெருமானுக்கும் தணிகைவேலன் என்று பெயர் அமைந்தது. தைப்பூசத் திருவிழா திருத்தணியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் சாற்றப்படுகிறது. பக்தர்கள், மொட்டை அடித்தல், மடிப்பிச்சை, காவடி எடுத்தல் என நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

10. திருச்செந்தூரில் தைப்பூசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, காவடி எடுத்து, அலகு குத்தி பாத யாத்திரை ஆக வருவர். கடலில் புனித நீராடி. அலகு குத்தியும் அங்க பிரதட்சணம் செய்தும் காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

தைப்பூச திருவிழாவிற்காக அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அஸ்திரதேவர் தீர்த்தவாரியும் நடைபெறும் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடைபெறும். அதன் பின்னர், சுவாமி அலைவாய்குகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு செல்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபராதனை நடைபெறும்.

11. சுவாமி மலையில் தைப்பூசம்

ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடு திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. அருணகிரிநாதர் ஏரகம் அமர்ந்த பெருமாளே என்று பாடுவார். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே தகப்பன்ஸ்வாமி என அழைக்கப்படும் சுவாமிநாத சுவாமிக்கு தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கல்யாண யோகத்தைத் தரும் முருகனுக்கு தைப்பூச நன்னாளில், சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ அலங்காரங்களும் நடைபெறும். பூசவிழா பெருவிழாவாகக் கொண்டாடப்படும் தலம் இது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றப்படும். அப்போது உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி – தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருள்வார். இரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெறும். தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடக்கும். விழாவின் சிறப்பம்சமாக பஞ்சமூர்த்திசுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், தைப்பூச நாளன்று காலை 10 மணிக்கு சுவாமி புறப்பாடும் அதைத் தொடர்ந்து கோயில் உள்ளே உள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடக்கும்.

12. திருப்பரங்குன்ற தைப்பூசம்

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும். தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரள்வர். பக்தர்கள் காவடி, எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். தொடர்ந்து மூலவரான முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வர். ஆண்டுக் கொருமுறை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும், மலையடி வாரத்திலுள்ள பழனியாண்டர் கோயிலிலுள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி, தெய்வானையும் சந்நதி தெரு, மேலரத வீதி, கீழ ரத வீதிகளில் எழுந்தருள்வதும் வழக்கம். பௌர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதும் சிறப்பு.

13. குமார வயலூரில் தைப்பூசம்

திருச்சிக்கு அருகில் உள்ள குமார வயலூர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் புகழ்வாய்ந்தது. தைப்பூசம் இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தக் கோயிலில் தைப்பூசத்தன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், 1 மணிக்கு கோயிலில் இருந்து முத்துக்குமார சுவாமி புறப்பட்டு உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறும். தொடர்ந்து அதவத்தூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு முத்துக்குமார சுவாமி அருள்பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெறும். 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வர காந்திடலை இரவு 10 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கு மண்டகப்படி நடைபெற்று, கிழவயலூர் தைப் பூச மண்டபத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்று, நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமம் வந்தடைகிறார். அடுத்தநாள் காலை 9 மணிக்கு வடகாபுத்தூரில் புறப்பட்டு உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சுவாமி. அல்லித்துறை பார்வதிஸ்வரர் சுவாமி.

சோழிங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் சுவாமி, சோமரசம்பேட்டை முத்து மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு காலை 10 மணியளவில் 5 கிராம சுவாமிகளும் சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு சோமரசம் பேட்டை நான்கு வீதிகளில் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்திற்கு பகல் 12 மணியளவில் வந்தடையும். அங்கு அனைத்து சுவாமிகளும் தங்கி இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்து 7 மணிக்கு மேல் தமது கோயில்களுக்கு சுவாமிகள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

14. மருதமலையில் தைப்பூசம்

கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற தலம் மருதமலை. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச விழா பெருவிழாவாக நடைபெறும். தை பூசமன்று தேரோட்டத் திருவிழா நடைபெறும். இப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடந்து, சிறப்பு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நிகழ்வு சிறப்பாக நடந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பூசமன்று நடக்கும். இதற்காக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். கோ – பூஜை நடத்தப்பட்டு, காலை 4 மணிக்கு மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடக்கும்.

விரதம் இருக்கும் பக்தர்கள் கொண்டு வந்த பால் குடம் மூலம் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருவார். பின்னர், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். பக்தர்கள் “அரோகரா… அரோகரா…’’ என பக்தி முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு தை பூசத்தின் சிறப்பு.

15. வைத்தீஸ்வரன் கோயிலில் தைப்பூசம்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ் வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கு உரிய தலம். தேவாரப்பாடல் பெற்ற இந்தக் கோயிலில், கிழக்கு கோபுரம் அருகே முருகப் பெருமான் தனிச் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பழனி ஆண்டவருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

தைப்பூசத் திருநாளில் திரளான பக்தர்கள் மேல ரத வீதியில் உள்ள ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு சுவாமிகளின் வேடம் அணிந்து கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் பால் காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து வீதி உலாவாக வந்து பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்த பிறகு ஆராதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

16. பால்குடம் ஏன்?

தைப்பூசம் போன்ற விழாக்களில் பால் குடம் எடுப்பது தொன்று தொட்டு நம் மக்களிடையே இருக்கக்கூடிய வழக்கம். இதை நேர்த்தித் கடனாகவும் எடுப்பார்கள். பக்தியின் அடிப்படையில் வருடம் தவறாமல் எடுப்பவர்களும் உண்டு. நேர்த்திக்கடன் எடுப்பவர்கள், அந்த முறை மட்டும் எடுப்பதோடு சரி. ஆனால், பக்திக்காக எடுப்பவர்கள் வருடம் தவறாமல் பால்குடம் எடுத்துச் செல்வார்கள். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் வளரும். எல்லா விதமான ஐஸ்வர்யங்களும் சேரும். பால் என்பது சகல செல்வங்களின் பிரதிநிதித்துவமாக சொல்லப்படுகின்றது. குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனாலும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப் போனாலும், பால்குடம் எடுப்பதை ஒரு நேர்த்திக் கடனாக செய்வார்கள்.

17. காவடியின் தத்துவம்

தைப்பூசம் என்றாலே மேளதாளத்தோடு காவடியும் பால்குடமும் எடுத்துக் கொண்டு பக்தர்கள் கோலாகலமாக முருக நாமத்தை உற்சாகமாக ஓதிக் கொண்டு வீதியில் செல்வதை நாம் பார்க்கலாம். காவடி எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. காவடி எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று விரதம் இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை மாலை கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

முருகனுடைய ஸ்தோத்திரங்களான கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், சண்முக கவசம் முதலிய நூல்களை ஓதி பூஜை செய்ய வேண்டும். காவடி எடுக்கும் நாளில் அவசியம் அன்னதானம் வழங்க வேண்டும். தைப்பூசம் மட்டுமல்லாது மாசி மகம், பங்குனி உத்திரம், போன்ற நாட்களிலும் காவடி எடுப்பார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.

18. பத்து நாள் விழா

தைப்பூச விழா பெரும்பாலான கோயில்களில் 10 நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் தைப்பூச விழா மிக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, மலேசியாவில் உள்ள கோயில்ளில், இலங்கையில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச நாளை சிறப்பான நாளாக கொண்டாடுகின்றார்கள். மலேசியாவில் பத்து மலை முருகன் கோயில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள்.

இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோயிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல்தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில்லயன் சித்தி விநாயகர் கோயில் வரை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோயிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு.

19. மரகதக் கல்லினால் ஆன முருகன்

தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படும் கோயில்களில் ஒன்று நடு பழனி மரகத தண்டாயுதபாணி கோயில். இது மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கும் பழனி மலையில் இருப்பதைப் போலவே மலை மீது முருகன் அமர்ந்திருக்கின்றார். மலை அடிவாரத்தில் விநாயகர் கோயில் இருக்கின்றது. இங்கு இருக்கும் முருகப் பெருமான் மரகத கல்லினால் ஆனவர். இவருக்கு இரு புறத்திலும் இரண்டு மயில்களும் நாகங்களும் உள்ளன. கோயிலுக்குப் பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியாவில் இருப்பதைப் போலவே பத்துமலை முருகன் காட்சி அளிக்கும் அற்புதக் கோயில் இது. பழனி மலையைப் போலவே இங்கே முருகன் காட்சி அளிப்பதால், இதற்கு நடுபழனி என்று பெயர். சூட்டியவர் காஞ்சி பெரியவர்.

20. குமரக்குன்றம் கோயிலில் தைப்பூச பெருவிழா

சென்னையில் இருக்கக்கூடிய குமரக்குன்றம் கோயிலில், தைப்பூசப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குரோம்பேட்டையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கின்றது. இதுவும் மலை மேல் அமைந்த ஆலயம். இந்த மலையை சோமாஸ்கந்தவரை என்று அழைக்கின்றார்கள். கருவறையில் கையில் தண்டம் ஏந்தி காட்சி தரும் முருகப் பெருமானை, சுவாமிநாதன் என்ற திருநாமத்தால் அழைக்கின்றார்கள். ஐஸ்வர்ய முருகன் என்றும் சொல்வார்கள்.

இவரை வணங்குபவர்களுக்கு சகல செல்வங்களையும் அள்ளி அள்ளி வழங்குகின்றான் முருகன். மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் சிவபெருமானுக்கு அம்பாளுக்கும் ஆலயம் உண்டு. இங்கு நடராஜர் காட்சி தருகின்றார். அவருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகிறது. தல விருட்சமாக அரச மரம் உண்டு. தீர்த்தத்திற்கு குமார தீர்த்தம் என்ற பெயர். மலையடிவாரத்தில் இடும்பன் காளிக்கு தனிச் சந்நதிகள் உள்ளன.

21. சிவாலயங்களில் தைப்பூசம்

முருகன் ஆலயங்களில் மட்டும் அல்லாது, சிவாலயங்களிலும் தைப்பூசப் பெருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்படும். வாயுவும், வருணனும், அக்னியும் சிவபெருமானின் சக்தியை உணர்ந்து வழிபட்டு, வரம் பெற்ற நாளாக தைப்பூசத் திருநாள் விளங்குகின்றது. தைப்பூச நாளில்தான் உலகம் படைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். தைப்பூசம் அன்று சிவபெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா வருவதை பேரூர் புராணம் எடுத்துரைக்கிறது. தைப்பூச நாளில் சென்னை கபாலீஸ்வரருக்குத் தேனால் அபிஷேகம் நடைபெறும் என்பதும் விசேஷம். இந்த அபிஷேகத்தைக் காண்
பவர்களுக்குப் பிறவிப்பிணி அகலும் என்பது நம்பிக்கை. திருஞான சம்பந்தர் அங்கம் பூம்பாவையைத் திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்.

22. ஜென்ம ஜென்மத்துக்கும் செய்த பாவங்கள் தீரும்

திருவிடைமருதூர் பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்க சுவாமி கோயிலில், தைப் பூசத்தையொட்டி பஞ்ச திருத்தேரோட்டமும் சுவாமி தேரோட்டமும் நடைபெறும். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெறும். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூச நாளில் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு பிராகாரத்தை ஒரு முறை சுற்றினால், ஜென்ம ஜென்மத்துக்கும் செய்த பாவங்கள் தீரும் என்பார்கள். இந்த திருச்சுற்றை அஸ்வமேத பிரதட்சணம் என்று சொல்லுவார்கள்.

பிரம்மஹத்தி தோஷம் கூட இந்த திருச்சுற்றினால் நீங்கிவிடும் என்று இதனுடைய தல வரலாறு சொல்லுகின்றது. தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து பூஜை அறையில் கோலமிட்டு வாசனையுள்ள பூக்களால் சிவனையும் அம்பாளையும் முருகனையும் அலங்கரித்து, குத்து விளக்கு ஏற்றி, திருப்புகழ், கந்தசஷ்டி கவசங்கள், தேவார திருவாசகங்களை ஓதி வணங்க வேண்டும். அருகில் உள்ள முருகன் மற்றும் சிவாலயங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். பூச நட்சத்திரம் விரதத்திற்கு உரிய நாளாக இருப்பதால், அவசியம் உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயம் சென்று வணங்கி வீட்டிற்கு வந்து பூஜை அறையிலும் விளக்கேற்றி வைத்து பூஜை செய்து உபவாசத்தை முடிக்க வேண்டும். இதன் மூலமாக நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

23. நடராஜரும் தைப்பூசமும்

இரணியவர்மன் என்ற மன்னன் தில்லையம்பதியில் பல்வேறு திருத்தொண்டுகள் செய்து ஒரு தைப்பூச நாளில்தான் ஈசனை நேருக்கு நேர் சந்தித்துப் பெரும்பேறு கொண்டான் என்கிறது தில்லை புராணம். பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற ரிஷிகளும் முனிவர்களும் நடராஜரின் திரு நடனம் காணத் தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்தி, அவர்களுக்கு தனது நடன திருக்காட்சியைக் காட்ட விரும்பினார். திடீரென்று ஆகாசத்தில் ஒளி வெள்ளம். முனிவர்களும் யோகிகளும் தங்கள் தவ நிலையை மறந்து பார்த்தனர். அப்பொழுது விண்ணில் இருந்து ஆனந்த நடராஜமூர்த்தி இறங்கி ஆனந்த நடனம் ஆடினர். அந்த ஆனந்த நடனக் காட்சி நடைபெற்ற நாள் தைப்பூசம். ‘‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’’ என்ற தத்துவத்தை விரித்துரைத்த ஆனந்த நடனம் தைப்பூசத்தில் நிகழ்ந்ததால் நடராஜமூர்த்தி பிரதானமாகத் திகழும் தில்லை பேரம் பலத்தில் தைப்பூசத் திருநாள் மிக உற்சாகமான உற்சவமாக கொண்டாடப்படும்.

24. வைணவத் தலங்களில் தைப்பூசம்

பூச நட்சத்திரத்தில் பெருமாளை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அப்படி வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பார்கள். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து சீர்வரிசைகள் சமயபுரத்தம்மனுக்குச் செல்வது தைப்பூசத்தன்றுதான்.

25. திருச்சேறை தேர்

கும்பகோணம் அருகே உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரநாத பெருமாள் கோயில் உள்ளது. பஞ்ச சார க்ஷேத்ரம் என வழங்கப்படும் இந்தக் கோயில் மார்கண்டேயனுக்கு முத்தி வழங்கிய தலம் என்பார்கள். இங்கு தைப்பூச விழா பிரமோற்சவமாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சாரநாதபெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உலா வருவார்.

இந்திர விமானம், சூர்யபிரபை, சேஷ வாகனம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடக்கும். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பூசம் அன்று நடைபெறும் இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதபெருமாள் தேரில் எழுந்தருள, 9 மணிக்கு தேரோட்டம் துவங்கும். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் முக்கிய வீதிகள்
வழியாக சென்று கோயிலை அடையும்.

26. ஸ்ரீ பெரும்புதூர் தைப்பூசம்

சுவாமி ராமானுஜர், ஒரு தைப்பூச நாள் அன்றுதான் ஸ்ரீ பெரும்புதூரில் “தாம் உகந்த திருமேனியில்” ஆவேசித்தார் தம்முடைய விக்கிரகத்திற்கு சக்தி விசேஷம் அளித்த தைப்பூச நாள், குரு புஷ்ய உற்சவமாக ஐந்து நாட்களுக்கு ஸ்ரீ பெரும்புதூரில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜருக்கு விசேஷமான திருமஞ்சனம் மற்றும் புறப்பாடு நடைபெறுகின்றது. அன்றைய தினம் திருப்பல்லாண்டு, கண்ணிநும் சிறுத்தாம்பு, ராமானுஜ நூற்றந்தாதி முதலிய பிரபந்தங்களை ஓத வேண்டும்.

27. வடலூரில் தைப்பூசம்

தமிழ் மாதத்தின் பத்தாவது மாதம் தை மாதம். எட்டாவது நட்சத்திரம் பூசம் நட்சத்திரம். இந்த இரண்டும் இணையும் பௌர்ணமி நாள்தான் தைப்பூச நாள். வள்ளலார் ராமலிங்க அடிகளார், தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள், காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும். வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையானது.

உலகமெங்கும் வாழும் பல லட்சக்கணக்கான சமரச சுத்த சன்மார்க்க பக்தர்கள் வடலூருக்கு வந்து தரிசனம் செய்கின்றார்கள். அன்று வடலூரில் ஏராளமானவர்கள் திரண்டு தைப்பூச உற்சவம் கண்டுகளிப்பார்கள். வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி அன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர்கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

28. அம்மன் கோயில்களில் தைப்பூசம்

அம்மன் கோயில்களில் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். திருவானைக்கோயில் அகிலாண்ட நாயகிக்கு தைப்பூசம் அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்னை பட்டாடையிலும் பரவசமான அணிகலன்களிலும் ஜொலிக்கும் காட்சி பரவசப்படுத்தும். மேல் மருவத்தூரில், தைப்பூசம் சிறந்த உற்சவமாக கொண்டாடப்படும். அன்று செவ்வாடை அணிந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனின் அருள் பெற திரள்வார்கள்.

29. வெற்றி தரும் தைப்பூசம்

தைப்பூச நாள் வெற்றி தரும் நாள் இந்த நாளில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். சீமந்தம், வாஸ்து, திருமணம், கிரகப் பிரவேசம் முதலிய சுப காரியங்களை நடத்துவதற்கு ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம். அதைப் போலவே புதியதாக பதவி ஏற்றுக் கொள்ளுதல், புதியதாக பொருள்களை வாங்குதல், யாத்திரை செல்லுதல், முதலியவற்றை பூச நட்சத்திர நாளில் நிகழ்த்தலாம்.

30. நிறைவுறை

தைப்பூச நாளைப் போல ஒரு சிறப்பான நாள் அமைய முடியாது. அன்று எல்லா முருகன் கோயில்களிலும் சுவாமி அம்பாள் வீதி உலாக் காட்சி நடைபெறும். சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும்கூட தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகாருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது. கரூர் குளித்தலையில் கடம் பவன நாதர் தைப்பூச திருநாளில்தான் சப்த கன்னியர்களுக்கு காட்சி தந்தார் என்பார்கள். இப்படி தைபூசப் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். பூசத்தின் பெருமைக்கு வார்த்தைகள் இல்லை.

எஸ். கோகுலாச்சாரி

The post தடைகளை அகற்றி வெற்றி தரும் தைப்பூச விழா! appeared first on Dinakaran.

Read Entire Article