மாதவரம்: வில்லிவாக்கம், ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொளத்தூர் லட்சுமி அம்மன் கோயில் தெரு அருகே ராஜமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றிருந்த வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த தீனா என்ற தினேஷ்(23) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் மெபென்டெர்மைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(27) என்பவரிடம் இருந்து அவர் இதை வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து அவரிடமிருந்து குறிப்பிட்ட 10 மில்லி போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் 13 சிறிய பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட போதைப் பொருளையும் பறிமுதல் செய்து கார்த்திக் மற்றும் தினேஷ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், மூலக்கடை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரிடமிருந்து போதைப் பொருளை வாங்கியதாகவும் அவர்கள் இந்தியா மார்ட் இணையதளம் மூலம் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும், வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
பாடி பில்டிங் செய்பவர்கள் உடலை ஏற்றுவதற்காக இந்த போதைப் பொருளை பயன்படுத்தினர். இதனையடுத்து கைதான கார்த்திக் மற்றும் தினேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
The post தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய 2 பாடி பில்டர்கள் கைது appeared first on Dinakaran.