தடுப்பணைகள் வெடி வைத்து தகர்ப்பு 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

2 months ago 9

சின்னசேலம், டிச. 18: ₹35 லட்சத்தில் கட்டப்பட்ட 5 தடுப்பணைகளை வெடி வைத்து தகர்த்த 2 பேர் மீது சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் மயூரா நதி உற்பத்தியாகி கல்லாநத்தம், பாண்டியங்குப்பம், வெட்டி பெருமாளகரம் ஆகிய கிராமங்கள் வழியாக கனியாமூர் ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் ஏரிக்கு வரும் கிளை வாய்க்காலில் சுமார் ₹32 லட்சம் மதிப்பில் ஐந்து சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கல்ராயன்மலை பகுதியில் மழை பெய்ததால் மயூரா நதியில் நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், மழைநீர் 5 தடுப்பணைகளிலும் தேங்கியதால், ஏரிக்கு வர கால தாமதமானது. இதையடுத்து ஏரிக்கு விரைவாக நீர் வர வேண்டும் என்ற எண்ணத்தில் அதே ஊரை சேர்ந்த விஜயன் என்பவர் சொன்னதன்பேரில் கடந்த 6 நாட்களுக்கு முன் காசி என்கிற காசிலிங்கம் கம்ப்ரசர் வண்டி மூலம், ஐந்து சிறிய தடுப்பணைகளையும் வெடிவைத்து தகர்த்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஊராட்சி செயலர் கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பாசன கால்வாயில் கட்டப்பட்டிருந்த ஐந்து தடுப்பணைகளும் வெடி வைத்து தகர்த்து பெரிய சேதம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரிராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் தடுப்பணைகளை உடைத்த விஜயன், காசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தடுப்பணைகள் வெடி வைத்து தகர்ப்பு 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article