தடாகம் அருகே யானை தாக்கி நடைபயிற்சிக்கு சென்றவர் பலி: வனத்துறையை கண்டித்து மக்கள் சாலைமறியல்

4 hours ago 1

கோவை: கோவை தடாகம் அடுத்த தாலியூர் அருகே யானை தாக்கியதில் நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழந்தார். வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை தடாகம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் உலாவி வருகிறது. இதனை கண்காணிக்க வனத்துறை சார்பில் ஆல்ஃபா என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி இருக்கிறது. அதே நேரத்தில் தாலியூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான நடராஜன் என்பவர் வழக்கம்போல 5.30 மணியளவில் தாலியூர் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்திய நடராஜனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தாலியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தடாகம் அருகே யானை தாக்கி நடைபயிற்சிக்கு சென்றவர் பலி: வனத்துறையை கண்டித்து மக்கள் சாலைமறியல் appeared first on Dinakaran.

Read Entire Article