* பாசன கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரவேண்டும்
* குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அதில், விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:
அம்மையகரம் ரவிச்சந்திரன்:
நில ஆவணங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் விவசாயிகள் அடையாள அட்டையை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஜூன் மாதம் தொடங்காமல், முன்கூட்டியே தொடங்க வேண்டும்.
இந்த தூர்வாரும் பணியை குடிமராத்து பணிகள் செய்தது போல, அந்தந்த பகுதி விவசாயிகளின் குழுவிடம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதால், அந்த திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அடகு வைக்கும் நகைகளுக்கு 7% வட்டியை பெற்று, பின்னேற்பு மானியமாக 3% தொகை திரும்ப வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வங்கிகளில் மேற்படி மானியம் 3% நகை கடனில் வழங்கப்படுவது இல்லை.
மேலும், அடகு வைத்த நகை கடன் புதுப்பிக்க வட்டி தொகை மட்டும் செலுத்தி புதுப்பித்து வந்தேன். தற்போது, RBI அறிவுறுத்தியுள்ளதாக கூறி அசலையும் வட்டியையும் முழுமையாக கட்டி புதுப்பிக்க வேண்டும் என வங்கிகள் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, முன்பு இருந்தது போலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நகைகடன் மற்றும் மானியம் போன்றவற்றை வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:
கடந்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு ரூ.500ம் அரசே வழங்க வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருவையாறு அறிவழகன்:
திருவையாறு பகுதியில் காட்டுப்பன்றிதொல்லை அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்த வேண்டும். சம்பா மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடை பெற்றுத் தர வேண்டும். திருவையாறு பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை உடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
பூதலூர் பாஸ்கர்:
ராயமுண்டான்பட்டியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பூதலூர் பகுதியில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாதம் சம்பளம் நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்:
கரூப்பூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மின் இணைப்பு இல்லாததால், கொள்முதல் பணி நடைபெறவில்லை. உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனுக்கு வட்டியை மட்டும் செலுத்தி புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே, வழங்கியது போன்று விவசாய நகைக்கடனுக்கு பின்னேற்பு வட்டி மானியம் 4 சதவீதம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்தார்.
The post தஞ்சை மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் appeared first on Dinakaran.