தஞ்சை மாவட்டத்தில் சராசரி அளவை தாண்டி கொட்டித் தீர்த்த மழை

6 months ago 27

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், சுற்றுலா தலமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுக்கு 1,098.21 மி.மீ. சராசரியாக மழை பெய்யும். இந்த மழை அளவு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை கணக்கிடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் சராசரி மழை அளவான 1098.21 மி.மீட்டரில் தென்மேற்கு பருவமழை மூலம் 318.19 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் 637 மி.மீட்டரும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காலக்கட்டங்களில் சராசரி மழை அளவை தாண்டியும், சில ஆண்டுகளில் சராசரிக்கு குறைவாகவும் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை மூலம் தான் தஞ்சை மாவட்டத்திற்கு அதிக அளவு மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் குறுவை சாகுடியும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. இதையடுத்து பெஞ்சல் புயல் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் சராசரி மழை அளவான 1098.21 மி.மீட்டரை தாண்டி 1,168 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக பெய்வதை காட்டிலும் கூடுதலாக மழை பெய்தது. அதே போல இந்த ஆண்டு அவ்வளவாக தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் சில இடங்களில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. நேற்று 14-ந்தேதி காலை வரை தஞ்சை மாவட்டத்தில் 1,168 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான சராசரி அளவை காட்டிலும் தற்போது வரை 70 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத இறுதி வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் கூடுதலாக மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான அளவை விட கூடுதலாக பெய்துள்ள நிலையில் ஏரி, குளங்கள் நிம்பி உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த அடைமழையால் வயல்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல், கடலை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Read Entire Article