தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா வரும் 9ம் தேதி துவங்குகிறது. இதற்காக கோயிலில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஐப்பசி சதய நட்சத்திரம் வரும் 10ம் தேதி வருவதால், 1,039வது சதய விழா நவ. 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் விழாவுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோயில் வாளகத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது. பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 9ம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது.
10ம் தேதி காலை தேவாரநூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து ராஜராஜ சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்துகின்றனர்.
இதையடுத்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும். அன்று இரவு ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற உள்ளது. ராஜராஜசோழனின் சதயவிழா 2ம் ஆண்டாக இந்தாண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
The post தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா 9ம் தேதி துவக்கம்: பந்தக்கால் நடப்பட்டது appeared first on Dinakaran.