மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2007- 2008 ஆண்டில் சித்த மருத்துவ சான்றிதழ் பட்டய படிப்பு முடித்தவர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் இருப்பதை சுகாதாரத்துறை செயலாளரும், டிஜிபியும் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் வல்லம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “தஞ்சாவூர் வல்லம் கொட்டாரத் தெருவில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பட்டய படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றுள்ளேன். ஆனால் ஆங்கில மருத்துவர்களின் தூண்டுதலால் போலீஸார் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்த விடாமல் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே, நான் சித்த மருத்துவ கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.